தேசிய கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமாதாரிகளுக்கான பாடசாலைத் தெரிவுக்கான ஒன்லைன் விண்ணப்பத்தில் தாம் விரும்பும் பாடசாலைகளைத் தெரிவு செய்ய முடியாத பிரச்சினை எழுந்துள்ளதாகவும் எனவே அதற்கு தீர்வாக மற்றுமொரு முறை விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாக கல்வி அமைச்சு உடன்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஒன்லைன் விண்ணப்பம் மூன்று முறை மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் தமது விண்ணத்தை நிரப்புவதில் சிரமங்களை எதிர் கொண்டுள்ளமை மற்றும் நியமன அடிப்படைகள் புறக்கணிக்கப்பட்டமை முதலானவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தொழில்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், விண்ணப்ப முடிவுத் திகதியை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலகபெரும தெரிவித்தார்.
உள்ளீர்ப்பு வெற்றிட அடிப்படையில் மற்றும் நிரந்தர வதிவிட அடிப்படையில் தற்போது நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த பிரதேச செயலகப் பிரிவிற்குள் அல்லது குறிப்பிட்ட மாவட்டத்துக்குள் மாத்திரம் நியமனங்களை வழங்குவதற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உடன்பட்டதாக தம்மிக அலகபெரும தெரிவித்துள்ளார்.
டிப்ளோமாதாரிகளின் திறமை அடிப்படையில் பெற்றுக்கொண்ட தேசிய மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கவும், தேசிய அடையாள அட்டை இலக்கத்தினூடாக ஒன்லைன் விண்ணப்பத்திற்குள் நுழைவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், அவ்வாறு முடியாத போது, அடையாள அட்டையின் பிரதி ஒன்றை மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வதாகவும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உடன்பட்டுள்ளதாக தம்மிக அலகபெரும தெரிவித்துள்ளார்.
.