மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் 313ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக, கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் -ரவி சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர் பற்றாக்குறை சம்பந்தமாக வலயக்கல்வி பணிப்பாளரிடம் நேற்று (16) நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்: கல்குடா கல்வி வலயத்தில் 313ஆசிரியர்களுக்கு தற்போது வெற்றிடம் நிலவுகின்றது.கணிதப்பாடத்துக்கு 77 ஆசிரியர்களும், விஞ்ஞானப்பாடத்துக்கு 53 ஆசிரியர்களும்,ஆங்கிலப்பாடத்துக்கு 45 ஆசிரியர்களும்,தகவல் தொழிநுட்பத்துக்கு 45 ஆசிரியர்கள் அடங்கலாக 25க்கு மேற்பட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
கல்குடா கல்வி வலயம் யுத்த காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.எனவே இப்பிரதேசத்தில் முழுமையான கற்றல்,கற்பித்தல் பணிகளுக்கு அதிகாரிகள் உதவ வேண்டும்.
கல்குடா பிரதேசத்தின் கல்வியை மேம்படுத்த இங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடன் தீர்க்க வேண்டியுள்ளது. பொறுப்புவாய்ந்தவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பல்வேறு அசௌரியங்களுக்கு முகங்கொடுத்து ள்ளனர். இதை நேரடியாக நான், அவதானித்து ள்ளேன்.
குறிப்பாக தமிழ்மொழி மூலமான மாணவர்கள் ஆசிரியர் பற்றாக்குறையால் பல சவால்களுக்கு உள்ளாகின்றனர். வறுமையும் இவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.
இவ்வருடம் க.பொ.சாதாரணதரம், உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நன்மைகருதி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.