கல்வியியல் கல்லூரிகளிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியாகும் பட்டதாரிகளுக்கு உரியகாலத்திற்குள் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கண்டியில் தெரிவித்தார்
கண்டி, பெனிதெனியவிலுள்ள ஆசிரியர் பயற்சி கல்லூரியில் நேற்று முன்தினம் (4) நடைபெற்ற தேசிய வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா,
இன்று எமது கல்வி அமைச்சின் ஊடாக நாடளாவிய ரீதியில் 2ஆம் கட்டமாக “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத் திட்டத்தின் கீழ் 250 பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டன. இதனால் கிராமப்புறத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்காக கல்வி அமைச்சு முதற் தடவையாக 200பாடசாலைகளை அபிவிருத்தி செய்துள்ளது.இரண்டாம் கட்டமாக 250 பாடசாலைகள் உள்வாங்கப்படுகின்றன.
இன்று கல்வி அமைச்சின் மூலமாக 26 கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்து போன யுத்த வடுக்களிலிருந்து மீண்டு சுமார் ஐந்து வருடங்களாக எமது அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசு குறுகிய ஆறு மாத காலத்திற்குள் பல்வேறு வேலைவாய்ப்புகளையும் அபிவிருத்தி பணிகளையும் மேற்கொண்டு அதனை நிரூபித்தும் காட்டியுள்ளோம். இந்நாட்டில் வாழும் மூவின மக்களும் ஐயக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் நிலையான வழிகளை பிரதமர் மேற்கொண்டுள்ளார். (தினகரன்)