வெள்ளிக்கிழமைக்கு முன் ஜனாதிபதியுடன் சந்திப்பு
அதுவரை பணிப் பகிஷ்கரிப்பு தொடருமென்கிறார் ஸ்டாலின்
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக ஜனாதிபதியுடனும் செவ்வாய்கிழமை கல்வி அமைச்சருடனும், பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் நேற்று தெரிவித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதேவேளை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என்ற போதிலும், எங்களது பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு வழங்கப்படும் வரை பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடப்போவதில்லையென்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் போது கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தொலைபேசியூடாக கலந்துரையாடினார்.
எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான சகல முயற்சிகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை காணப்படுகிறது. அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கள் தொடர்பான வழக்கு தீர்ப்பு , அமைச்சரவை பத்திரம், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் என்பனவும் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் திங்களன்று அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவை பத்திரம் தொடர்பில் செவ்வாயன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதாகவும், அதனையடுத்து ஜனாதிபதி சம்பள ஆணைக்குழு உள்ளிட்டவற்றுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் ஜனாதிபதியை சந்திப்பதற்கும் ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்ட போதிலும் இணையவழி கற்பித்தலிலிருந்து விலகியிருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்பதை நாம் அவர்களிடம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் தயார். ஆனால் எமது பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு அவசியம். அதுவரையில் எமது எதிர்ப்பு போராட்டங்களை நாம் கைவிடப் போவதில்லை.
ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாத்திரமே பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாலைதீவு ஜனாதிபதி நாட்டுக்கு வருகை தந்துள்ளதால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சரவை பத்திரம் உள்ளிட்டவற்றில் எமக்கு நம்பிக்கை கிடையாது. நாம் எமது போராட்டங்களைக் கைவிட வேண்டுமாயின் அரசாங்கம் எமக்கான துரித தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவிக்கையில் ,
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (30) முன்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறப்பட்டது. எவ்வாறிருப்பினும் எமது தொழிற்சங்க நடவடிக்கையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. அவ்வாறு மாணவர்கள் பாதிப்புக்களுக்கு முகங்கொடுப்பதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது நிர்வாகிகளின் கைகளிலேயே உள்ளது. எனவே இந்த பிரச்சினைகளை தொடர்ந்தும் உதாசீனம் செய்வதற்கு அதிபர்களும் ஆசிரியர்களும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.
கே. அசோக்குமார்
தினகரன்