ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல் என்ற திட்டத்தின் கீ்ழ் பிரேரிக்கப்பட்டவற்றை கல்வி அமைச்சு திசைமாற்றியுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தொழில் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பல்லைக்கழக பீடமாக மாற்றி அதனூடாக கல்விமாணிப் பட்டத்தை வழங்காது, தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாகப் பட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. மிக விரைவில் 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் எழுதிய மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
எனினும், ஜனாதிபதியின் திட்டத்தை கல்வி அமைச்சு சிதைத்துள்ளதாகத் தெரிவிக்கும் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சங்கத்தினர், இதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதன் படி, கடந்த 4 ஆம் திகதி இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதோடு, மார்ச் 11 ஆம் திகதி கல்வி அமைச்சின் முன்னால் அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரித்துள்ளனர்.
கல்வி அமைச்சரின் தீர்மானத்தில் மாற்றம் இல்லாத போது தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் இப்போராட்டத்தில் 19 கல்வியியல் கல்லூரிகள், 8 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் 119 ஆசிரியர் மத்திய நிலையங்களில் பணிபுரியும் இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகமொன்றின் பீடமாக தேசிய கல்வியியல் கல்லூரிகளை மாற்றும் செயன்முறை மிகவும் சிக்கலுக்குரியது என்ற வகையில் கடந்த மாதங்களில் இடம் பெற்ற கலந்துரையாடல்கள் எதுவும் பயனளிக்கவில்லை.
பட்டம் வழங்கும் அரச நிறுவகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்ததாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் பல்கலைக்கழக பீடமாக தேசிய கல்வியியல் கல்லூரிகளை மாற்றுவதன் ஊடாக அதன் விரிவுரையாளர்கள் – இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள்- பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை ஒத்த கொடுப்பனவை எதிர்பார்த்து இத்திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வருவதாகவும் கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.