சுகாதாரப் பாதுகாப்ப தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளரது வழிகாட்டலை உள்வாங்கி கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்று நிருபத்தின் படி பிரதேச சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டலும் மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் உயர் தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு கிழக்கு மாகாணக் கல்வி அதிகாரிகளும் சிறிய பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு மத்திய மாகாண கல்வி அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை கல்வி அமைச்சின் செயலாளரது சுற்றறிக்கைக்கு முரணானது என இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முன்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான செலவுகளை பெற்றாரின் மீது சுமத்தாது, அரசாங்கம் அதற்கான நிதி வசதிகளை வழங்க வேண்டும் என்ற தலைப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக அதன் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,
பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர், கை கழுவுதல், கிருமி நீக்கம் செய்தல், நோயாளர் அறை ஒன்றை பராமரித்தல், உடல் வெப்பத்ததை அளவிடல் முதலான நடவடிக்கைகளுக்கு ஏற்படும் செலவுகளை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் கணக்கில் காணப்படும் இது வரை பயன்படுத்தாத அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் ஊடாகப் பெற்றுக் கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளரது சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது, எனினும் இவ்வாறு மீதமாக நிதி இல்லாத பாடசாலைகளும் நிதி போதாத பாடசாலைகளும் இந்த செலவை பெற்றாரிடம் அறவிடுவதை அனுமதிக்க முடியாது. தற்போது பெற்றார் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு மத்தியில் இதற்கும் செலவளிப்பது இயலாத விடயமாகும். அரசாங்கதிற்கு பாரியளவில் வெளிநாட்டு நிதி கிடைத்துள்ள இச்சூழலில் பாடசாலைகளின் நடவடிக்கைக்கான நிதியை வழங்க அரசு முன்வர வேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முன்னர் 43 லட்ச மாணவர்களுக்கும் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் தேவையான முககவசங்களை வழங்குதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என அவ்வறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
அரசாங்கம் தேவையான நிதிவசதிகளை வழங்கும் போது பாடசாலைகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர்களும் ஆசிரியர்களும் தயாராக உள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.