கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களின் மாதாந்த மேலதிக கொடுப்பனவு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையும் 1500 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுவந்த இவர்கள், புத்தாண்டிலிருந்து 3000 ரூபாவை மேலதிக கொடுப்பனவாகப் பெறவுள்ளனர்.கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் இதுபற்றி நேற்று (20) அறிவித்தார். இவ்வதிகரித்த 3000 ரூபா கொடுப்பனவு 2020.01.01 இலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பணியாற்றிவரும் சுமார் 450 ஆசிரிய ஆலோசகர்கள் இம்மாதம் முதல் இவ்வதிகரிப்பைப் பெற்றுக்கொள்வர். வடக்கில் இக்கொடுப்பனவு ஏலவே வழங்கப்பட்டு வந்தபோதிலும் கிழக்கில் பல வருடகாலமாக 1500 ரூபாவே வழங்கப்பட்டது.
இந்நிலையில் இக்கொடுப்பனவுகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால் சுமார் 450பேர் நன்மையடையவுள்ளனர். சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களுக்கு தனியான சேவை உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள போதிலும் இன்னும் இத்திட்டம் அமுலுக்குவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (thinakaran)