கிழக்கு மாகாண சபை முஸ்லிம் பாடசாலைகளுக்கான கால அட்டவணையை தன்னிச்சையாக மாற்றியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் 17 ஆம் திகதி ஆரம்பமான போதிலும் கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் மாத்திரம் 22 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுனர் மேற்கொண்டுள்ள தீர்மானம் முஸ்லிம் பாடசாலைகளின் வருடாந்த கால அட்டவணையை மீறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் மூலம் ஏனைய முஸ்லிம் பாடசாலைகள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
17, 18 ஆகிய தினங்களில் பாடசாலைகள் நடைபெற்று பின்னர் 19,20,21 ஆகிய தினங்கள் விடுமுறை மற்றும் வார இறுதி காரணமாக பாடசாலைகள் மூடப்படுவதனால் கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளை ஆளுனர் 22 ஆம் திகதி மீண்டும் திறப்பதற்காக இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்டதன் படி 17 ஆம் திகதி அனைத்து முஸ்லிம் பாடசாலைகளையும் ஆரம்பிக்கும் படி கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாக மத்திய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் செயலாளர் முது பண்டா, கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 400 முஸ்லிம் பாடசாலைகளை மாத்திரம் 22 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு ஆளுனர் தீர்மானித்தாகவும் மத்திய கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பாடசாலைகள் ஏற்கனவே குறிப்பிட்டதன் படி 17 ஆம் திகதி ஆரம்பமாககும் என்றும் தெரிவித்துள்ளார்..
புதிதாக ஆளுனர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஆளுனர்கள் பாடசாலைகளை மூடுவதிலும் திறப்பதிலும் ஆர்வம் காட்டிவருகின்றனர். தன்னிச்யையான முடிவுகளை தீடீர் திடீர் என அறிவிக்கின்றனர்.
எனினும் பாடசாலைகளுக்கென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணை ஒன்று காணப்படுவதையும் ஏனைய பிரதேச பாடசாலைகள் பாதிக்கப்படாத வகையிலும் கவனத்தில் கொள்வது சிறந்தது.
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலை சமூகத்திற்கு மாத்திரம் விடுமுறையை நீடித்து வழங்குவதற்கான ஆளுனரின் தீர்மானத்திற்கான காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்பதே கல்வி அமைச்சின் அபிபிப்பிராயமாகும்.