கொரோனா கால கல்வி வழங்கல்: அரசின் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொரேனா கால நெருக்கடிகள் காரணமாக தடைப்பட்டுள்ள கல்வி வழங்கல் செயற்பாட்டுக்கான மாற்று வழிமுறைகள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது.
கல்வி வழங்கல் தொடர்பாக முன்வைக்கப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு
இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கல்வி அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் மற்றும் நாமல் ராஜபக்ச மற்றும் ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த முதலானோர் கலந்து கொண்டனர்.
ஈ தக்சலாவ இணையத்தளத்தின் மூலம் டேட்டா கட்டணமின்றி, இலவசமாக மாணவர்கள் கல்வி கற்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் இணையத்தளத்தினூடாக ஈ தக்சலாவ தளத்திற்கு பிரவேசிக்கும் போது கட்டணம் அறவிடப்பட மாட்டாது. ஈ தக்சலாவ தளத்தில் தரம் 1 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு மும்மொழிகளிலும் சுய கற்றலுக்கான வளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 000 கற்றல் சாதனங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
மேலதிகமாக கற்றல் முகாமைத்துவ தொகுதியாக LMS இதனை பாவித்து, ஆசிரியர்கள் தமது கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய வசதிகள் காணப்படுகின்றன. தினந்தோரும் இரண்டு இலட்சம் மாணவர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
குருகெதர தொலைகாட்சி அலைவரிசை மூலமாக,, சென்னல் ஐ மற்றும் நேத்ரா தொலைகாட்சியினூடாக மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலங்களில் நடைபெறுகின்றது.
இவ்வாறாக தொலைக் கல்வி நடவடிக்கைள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை ஏறத்தாழ 12 % ஆன மாணவர்களள் அவற்றை அணுக முடியாதுள்ளனர். இணைய வசதி இன்மை மற்றும் சாதனங்கள் இன்மை அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
கொவிட் நிலைமைகளில் தொலைகாட்சி, இணையம், ரேடியோ போன்ற பல்வேறு வழிகளில் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில், அவற்றை அணுக முடியாத மாணவர்களுக்காக, இணைய வசதி, இணையத்தை அணுக உபகரணங்கள் இல்லாத மாணவர்களுக்காக இவ்விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஈ தக்ஸலாவ வையை முன்னிறுத்தி, பிராந்திய ரீதியில் சிறு குழுக்களுக்கான கற்றல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இப்பிராந்திய கற்றல் ஏற்பாட்டிற்கு பொறுப்பாக ஒரு அதிபர், இரண்டு ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி பயிலுனர் மற்றும் உதவியாளர் என்போர் நியமிக்கப்படுவர். ஈ தக்சலாவ தளத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் கற்க வசதிகள் செய்து கொடுக்கப்படும். குறைந்தது 10 கணினிகள் அல்லது டெப் வழங்கப்படுவதுடன் இணைய வசதியும் செய்து கொடுக்கப்படும். இவை வாரத்தின் ஐந்து நாட்கள் காலை 7.30 தொடக்கம் 3.0 வரை இயங்கும். இது ஒரு பாடசாலையாகவோ, மஹிந்தோதய ஆய்வுகூடமாகவோ, நெனசலயாகவொ, மத நிலையமாகவோ அல்லது தனியார் நிறுவனங்களின் தொண்டு செயற்பாடாக கிடைத்த இடமாகவோ அமையும்.
உடனடியாக ஆரம்பிக்க வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மேற்பார்வை வலய மட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
இதற்கு மேலதிகமாக ஈ தக்சலாவயில் இணைக்கப்பட்ட வீடியோ மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு நேரடி கற்பித்தல் நடவடிக்கைள் மேற்கொள்ள பயிற்சி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜூன் 25 ஆம் திகதி 25 பாடசாலைகள் LMS முறையினை பயன்படுத்தி செயற்பாடுகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவும் ஈ தக்சலாவ இனூடு இணைந்ததாக அமையும். ஜுலை மாதம் 25 ஆம் திகதி அளவில் இத்திட்டம் 250 பாடசாலைகளுக்கு விஸ்தரிக்கப்படும்.
அனைத்துப் பிரதேசங்களுக்கும் சிக்னல் வழங்கும் செயற்றிட்டம் இரு வருடங்களுக்குள் முடிக்கப்பட்டு ஒன்றிணைந்த சிக்னல் வழங்கும் முறைமையினூடாக எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிக்கான சிக்னல் வழங்கப்படும்.
ஆசிரியர்களுக்கு டெப் அல்லது கையடக்க தொலைபேசி கொள்வனவுக்கு இலகு தவணைக் கடன் ஏற்பாடுகள் தொடர்பாக வங்கிகளுடன் கலந்துரையாடப்படுகிறது.