ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதற்கமைய இந்த சட்டமூலம் எதிர்வரும் 08 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளது.
உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் தலைமையில் நேற்றுக் கூடிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்ஹ மற்றும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
முன்னர் பாதுகாப்புத் தரப்பினரைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழகக் கல்வியை வழங்கிவந்த இந்தப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் வழங்கிய ஆலோசனைக்கு அமைய சாதாரண மாணவர்களும் கல்வி பயிலும் வகையில் இது விஸ்தரிக்கப்பட்டது என இங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையிலான விடயதானங்களில் மாணவர்களை உருவாக்குவது தொடர்பில் இந்தப் பல்கலைக்கழகம் மீது பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்திற்கிடையில் உயர்ந்த மதிப்பு மற்றும் கேள்வி ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாடநெறிகள் பூர்த்தி செய்யப்படுவது இதற்குப் பிரதான காரணம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இந்தப் பாடநெறிகள் யாவும் உயர்ந்த தரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், க.பொ.த உயர்தரத்தில் சித்திபெற்ற சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை வழங்குவது என்ற ஜனாதிபதியின் கொள்கையை நிறைவேற்றும் நோக்கில் இந்தப் பல்கலைக்கழகம் எதிர்காலத்தில் செயற்படும் என்றும் கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.
இந்த சட்டமூலம் 2009ஆம் ஆண்டிலேயே முதலில் ஆரம்பமானது. 12 வருடங்களுக்கு மேலாக இச்சட்டமூலம் காணப்படுகிறது. நிபுணர்கள் பலர் இணைந்து இதனைத் தயாரித்து சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி, பல்வேறு ஆய்வுகளின் பின்னர் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு 2018ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அப்போது பாதுகாப்பு அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேன இதனை முன்வைக்க முயற்சித்தபோதும் பல்வேறு காரணங்களால் நிவர்த்தி செய்ய முடியாமல் போனது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குறிப்பிடுகையில், முன்னாள் பிரதமர் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல அவர்களால் இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட காணியில் 1981ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்துக்கான சட்டமூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளபோதும் தேசிய பல்கலைக்கழகத்துக்குத் தேவையான கட்டமைப்பு சட்டபூர்வமாக வழங்கப்படவில்லை என்றார்.
எனினும், உயர் கல்வியைத் தனியார் மயப்படுத்தல் மற்றும் உயர் கல்வியை இராணுவமயப்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் இச்சட்டமூலத்திற்கு எதிராக நேற்று கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.