கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலில் சேர்க்கப்படும் என்றும் இது 31ம் திகதியுடன் நிறைவு பெறுவதுடன் பரீட்சை அடுத்த மாதம் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் பரீட்சை இடம்பெறுவதுடன், இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 30 ஆயிரத்து 704 பேர் தோற்றவுள்ளனர், நாடு முழுவதிலும் 2675 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறுவதுடன் 315 இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. பிரதேச மட்டத்தில் 38 மத்திய நிலையங்களை ஒன்றுதிரட்டும் மத்திய நிலையங்களாக முன்னெடுப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
பரீட்சைக்குத் தேவையான பணியாளர்களுக்கு பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தைப் போன்றே இந்த வருடத்திலும் வினாப் பத்திரங்களை வாசித்துப் புரிந்து கொள்வதற்காக பரீட்சார்த்திகளுக்கு கால அவகாசம் வழங்கப்படும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மேலும் குறிப்பிட்டார்.