எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி 03 கட்டங்களாக முன்னெடுக்க, பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணி இம்மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணி செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் ஒக்டேபார் முதலாம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது.
மூன்றாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணி செப்டெம்பர் 24 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 08 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகளுக்காக, 12 பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 498 மதிப்பீட்டு நிலையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதோடு, 8,466 ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடவுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்தது.
இதேவேளை, ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படா விட்டால், ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியை பகிஷ்கரிக்கவுள்ளதாக, அகில இலங்கை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.