க.பொ.த சாதாரண தர மாணவர்களின் பாடத்திட்டங்கள் 100% முதல் 60% வரை முடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட தகவல் சேகரிப்பில் தெரிய வந்துள்ளது.
கோவிட் வைரஸ் நிலை இருந்தபோதிலும், வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற எல்லா கோட்டங்களிலும் பாடத்திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில கோட்டங்களில் 100 சதவீதத்தை அடைந்துள்ளது என்றும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக மிகக் குறைந்த மட்டத்தில் ஆங்கிலப் பாடமே முடிக்கப்பட்டுள்ளது. இது கோவிட்19 நிலமை காரணமாக அன்றி, ஆசிரியர்களின் பற்றாக்குறையின் காரணமாக ஏற்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
பரீட்சைக்கு இன்னமும் இரண்டு மாதங்களுக்கும் மேல் மீதமுள்ளதால் பாடத்திட்டத்தை முடிக்க முடியும் என்று அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பான முடிவுகளை எடுக்க க.பொ.த. சாதாரண தர வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து தகவல்களைப் பெற கல்வி அமைச்சு இந்த மதிப்பீட்டை மேற்கொண்டது.
முதலில் ஒன்லைனில் ஆசிரியர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 1 முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.