சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடக பிரபலமுமான, கலா கீர்த்தி எட்வின் ஆரியதாஸ இன்று (22) காலமானார்.
நடமாடும் நூலகம் என அழைக்கப்பட்ட அவர், தனது 98ஆவது வயதில் காலமானார்.
1922ஆம் ஆண்டு டிசம்பர் 03ஆம் திகதி, காலி, உணவட்டுனவில் பிறந்த அவர், மஹிந்த கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியைக் கற்றதோடு, சிலோன பல்கலைக்கழகத்தில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பட்டத்தை பெற்றார்.
இயற்கை ஆர்வலரான அவர், ஆசிரியர் தொழிலில் தனது பயணத்தை ஆரம்பித்து, பின்னர் ஊடகத் துறைக்குள் நுழைந்தார்.
1949ஆம் ஆண்டு முதன் முதலில் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்த அவர், லேக் ஹவுஸ் ஸ்தாபகர் டி.ஆர். விஜேவர்தனவுடன் பணியாற்றிய ஒரேயொரு உயிர் வாழும் ஊடகவியலாளராக இன்று (22) வரை இருந்தார்.
Dailynews உள்ளிட்ட லேக் ஹவுஸ் நிறுவனத்தில் வெளிவந்த, பெரும்பாலான பத்திரிகைகளில் பணி புரிந்த அவர், ‘நவயுகய’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.
எட்வின் ஆரியதாஸ, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில், வெகுஜன தொடர்பாடல் மற்றும் ஊடக கற்கை நெறிகளை நிறுவுவதில் பெரும் பங்காற்றியிருந்தார்.
பல்வேறு பத்திரிகைகள், ஊடக நிறுவனங்களில் இறுதி வரை தனது பங்களிப்பு மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்த அவர், பல்வேறு ஆங்கில மற்றும் சிங்கள புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.