– யாழில் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை
அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட அதிபர் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு ஜனவரி மாதம் 20ஆம் திகதி கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
யாழ் மத்திய கல்லூரியில் நேற்று (18) சனிக்கிழமை இடம்பெற்ற அதிபர் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு 120 நாட்களுக்கு மேல் அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவை கோரி ஒன்றிணைத்து பாரிய போராட்டத்தை நடத்தினோம்.
குறித்த போராட்டம் ஆசியாவிலேயே அதிபர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் போராட்டமாக பார்க்கப்படுகிறது.
போராட்டத்தின் எதிரொலியாக அரசாங்கம் 30 மில்லியன் ரூபாய்களை சம்பளமாக வழங்குவதற்கு உறுதிமொழி வழங்கிய நிலையில் நாமும் எமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினோம்.
எதிர்வரும் 2020 ஜனவரி 20ஆம் திகதி அனைவருக்கும் சம்பள தினம் அத்தினத்தில் எமக்காக உறுதியளிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும்.
1994ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த சுபோதினி அவர்களால் சம்பள முரண்பாட்டை தீர்வு காணும் முகமாக சுபோதினி அறிக்கை முன்வைக்கப்பட்டது.
அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத நிலையில் நாம் போராட்டங்கள் ஊடாக வலியுறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
போராட்டத்தின் எதிரொலியாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மாற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் நமக்கு ரூபா 30 மில்லியன் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் தற்போது எரிவாயு அடுப்பு கிடைக்கிறது
உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது பால்மா வகைகளுக்கு தட்டுப்பாடு இவ்வாறான நிலையில் நமக்கு 30 மில்லியன் கிடைக்குமா ? என்ற சந்தேகம் இருக்கிறது.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம் என பியகம என்ற ஆலோசனை அமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டை தலைகீழாக கொண்டு செல்கிறார்கள்.
சம்பள அதிகரிப்பு ஜனவரி மாதம் இடம்பெற வேண்டும் என்றால் தற்போது சுற்றறிக்கைகள் வெளிவந்திருக்க வேண்டும் அவ்வாறு எந்த சுற்றறிக்கைகளும் வரவில்லை.
அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக மாற்றப் போகிறோம் என அபிப்பிராயம் கேட்கிறார்கள் ஆனால் அமைச்சரவையில் எவ்விதமான தீர்மானங்களும் இன்றி இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகிறது.
எது எவ்வாறு நடந்தாலும் எமது தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என தெளிவாக அரசாங்கத்துக்கு கூறிவிட்டோம்.
ஆகவே அடுத்த வருட சம்பளத் திகதியில் நமக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்காவிட்டால் மறுநாள் எமது போராட்டத்தை ஆரம்பிப்போம் என ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
Thinakaran