இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு உடனடியாக ஆசிரியர் நியமனம் வழங்கக் கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்
இணங்கியபடி 216/18 கல்வியாண்டிற்கான கல்வியற் கல்லூரிகளில் கல்வி கற்ற 3772 டிப்ளோமாதாரிகளுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்கள் வழங்க அரசாங்கம் தவறியதற்கு எதிராக அந்த டிப்ளோமாதாரிகளின் பங்களிப்புடன் எமது சங்கம் ஜனவரி 4 ஆம் திகதி கல்வி அமைச்சின் முன்னால் போராட்டம் ஒன்றை நடத்தும் என்பதை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம் என கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 2014 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர சித்தி பெற்றவர்களின் மாவட்ட தகுதி மற்றும் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் கல்வியற் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளோமா பாடநெறிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்த டிப்ளோமாதாரிகள் தங்கள் படிப்பை நிறைவுசெய்ய ஆறு ஆண்டுகள் கடந்தன.பாடநெறியின் இறுதி முடிவுகள் வெளியாகி இப்போது 9 மாதங்கள் ஆகின்றன.
இந்த டிப்ளோமாதாரிகள் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் போது தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், மேலும் கல்வி அமைச்சு இந்த நியமனங்கள் தாமதப்படுத்துவதால் அவர்களுக்கும் ஆசிரியர் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கும் செய்கின்ற பாரிய அநீதியாகும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நியமனங்கள் வழங்குவது தொடர்பாக டிசம்பர் 10 ஆம் திகதி ஒன்லைனில் அவர்களின் நியமன விருப்பங்களைப் பெற கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அச்செயற்பாட்டில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் டிசம்பர் 11 ம் திகதி, , எங்கள் சங்கம் அவர்களுக்கு இந்த நியமனங்கள் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவித்தது,
மேலும் டிசம்பர் 14 அன்று அந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பையும் கோரியது ஆனால், இவற்றைச் செவிமடுக்காத கல்வி அமைச்சு இந்த நிலைமைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கல்வி அமைச்சு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி ஆட்சேர்ப்பு அடிப்படையில் மேலும் தாமதமின்றி மற்றும் அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் இந்த நியமனங்களை வழங்குமாறு பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறோம் என சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.