டொலர் நெருக்கடி காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக போதுமான கடதாசிகளைப் பெற்றுக் கொள்ள முடியாமையினால் வினாத்தாள் அச்சிடுவதில் பாரிய சிக்கலை திணைக்களம் எதிர்கொண்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடாத்தப்படவிருந்த இப்பரீட்சை மேமாதம் 23 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது. இப்பரீட்சைக்கு சமார் ஆறு இலட்சம் மாணவர்கள் தோற்றுகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற உயர் தரப் பரீட்சைக்கான வினாப்பத்திரங்களை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டதாகவும், வினாப்பத்திர அச்சிடலுக்கு தேவையானளவு கடதாசிகளை அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக் கொண்டே வினாத்தாள் அச்சிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வினாப்பத்திர அச்சிடலுக்கான கடதாசி பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம.டி தர்மசேன தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.