பாடசாலையினுள் மேற்கொள்ளப்படும் பணம் சேகரிப்பதைத் தடுக்கும் வகையில் செயற்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் போலி வேசம் போடுகிறார் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பாடசாலையில் மேற்கொள்ளப்படும் மொத்த செலவை மாணவர் எண்ணிக்கையால் பிரித்து அந்த தொகையை மாணவர்களிடமிருந்து அறவிட வேண்டும் என்று கோரும் 05/2015 சுற்று நிருபத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போது 26/2018 சுற்று நிருபத்தை கல்வி அமைச்சு வௌியிட்டது.
இது சுதந்திரமாக பெற்றாரிடம் நிதி அறவிடுவதை சட்டமாக்கியதோடு பாடசாலைச் செலவுகளில் இருந்து அரசாங்கம் விலகி நிற்பதற்கான முயற்சி செய்தது.
எனினும் கல்விச் சமூகத்திலிருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக குறித்த சுற்று நிருபத்தை அமைச்சு சுருட்டிக் கொண்டுள்ளது.
எனவே, மீண்டும் 05/2015 சுற்றுநிருபத்தை அமுல்படுத்தியுள்ளது. இது ஒரு உருப்படியான தீர்வாக அமைய முடியாது. இது ஒரு ஏமாற்று வித்தை என இலங்கைஆசிரயர் சேவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க விடுத்துள்ள அறிக்கையில் கல்வி அமைச்சின் இந்த செயற்பாட்டை தங்கையைக் காட்டி அக்காவை திருமணம் செய்து வைத்த கதைக்கு ஒப்பானது என சாடியுள்ளார்.