மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் தொடங்கியது முதல், உரிய முறையில் தரத்தை பேணாத பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்விஅமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய முறையிலான உணவுப் பழக்கவழக்கத்திற்கு சிறுவர்களை வழிகாட்டும் வகையில், பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளின் பராமரிப்புத் தொடர்பாக, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார்.
பாடசாலைச் சிறுவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி தொடர்பாக அண்மைய ஆய்வு மூலம், அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறுவர்களின் தவறான உணவுப் பழக்கவழக்கம், இதற்கு முக்கிய காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுவர்கள் மெலிவடைதல், உடற்பருமன், குள்ளம் மற்றும் அதிக எடை போன்ற ஊட்டச்சத்து பிரச்சினைகளுக்கு சிறுவர்கள் முகங்கொடுப்பதோடு, இதன் விளைவாக அவர்கள் இதயநோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் மற்றும் பல் சார்ந்த நோய்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயமும் இருப்பதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவற்றை கருத்திற்கொண்டு சிறுவர்கள் சரியான முறையிலான உணவுப் பழக்கவழக்கத்தில் ஈடுபடுத்தும் வகையில் பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளை நடத்திச் செல்வது தொடர்பில் அதிகாரிகளுக்கு, கல்வி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில், சுகாதாரமான முறையில் சிற்றுண்டிச் சாலைகளை பராமரிப்பது தொடர்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் 2015-12-31 திகதியிடப்பட்ட 35/2015 எனும் சுற்றுநிரூபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய தேசிய ஊட்டச்சத்து கொள்கையின்படி, துரித உணவு மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களுக்கு பதிலாக, தேசிய கொள்கைகளுக்கு அமைவான,அளவான மற்றும் தரமான உணவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறுவர்களுக்கு நியாயமான விலையில் உணவு வாங்குவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்துவதும் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை நடாத்திச் செல்வது மற்றும் அது தொடர்பான விடயங்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது உணவு சட்ட விதிமுறைகள், நுகர்வோர் விவகார சட்டங்கள் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு அமைய இடம்பெறும். அத்துடன் உணவு தயாரிப்போர், உணவு விநியோகிக்கும் இடம், பயன்படுத்தும் உபகரணம் போன்றவற்றின் தூய்மையை உறுதிப்படுத்தல், அதிக எண்ணெய், அதிக சீனி, அதிக உப்பு கொண்ட உணவுகளை விற்காதிருத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முழுமையாக கவனம் செலுத்துமாறு குறித்த சுற்றுநிரூபத்தின் மூலம் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களின் பொறுப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன் அடிப்படையில், உரிய தரத்திற்கு அமைய பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, அண்மையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் கல்வி அமைச்சினால், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டன. இதன்போது, ஒவ்வொரு பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பான அறிக்கைகளும் பெறப்பட்டதோடு, எதிர்வரும் மூன்றாம் தவணை ஆரம்பம் முதல் உரிய முறையில் தரம் பேணாத சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
(தினகரன்)