இம்முறை நடைபெற்ற க.பொ.த.பரீட்சையின் உயிரியல்பாட வினாத்தாள் ஒன்றில் தவறுகளும் ,பிழைகளும் மலிந்திருப்பதாக முன்னாள் மேலதிக பிரதம பரீட்சகர் செ.ரூபசிங்கம் குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உயிரியல்பாட பிரபல ஆசிரியரும், முன்னாள் மேலதிக பிரதம பரீட்சகருமான ரூபசிங்கம் குறிப்பிடுகையில்:
இத்தகைய தவறுகள் மிகநுட்பமானவை. மாணவர்களது பெறுபேற்றைப் பாதிப்பவை. மயக்கமான நிலையை உண்டுபண்ணுபவை. இவ்வாறான தவறுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்த வண்ணமுள்ளன. குறிப்பாக 2019 ,2020 வினாத்தாள்களில் நூற்றுக்கணக்கான பிழைகள் காணப்பட்டன. சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பாக பலசந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப் பட்டபோதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.என்றார்.
அவரது அறிக்கை தெரிவிப்பதாவது:
கடந்த 07.02.2022 அன்று நடைபெற்ற உயிரியல் வினாத்தாள் 1 இல் வழமைபோல பல தவறுகளும் பிழைகளும் காணப்படுகின்றன.
அவற்றுள் சில வருமாறு.
2 வது வினாவில் பிரதானமாக(mainly) என்பதற்குப் பதிலாக முக்கியமாக எனவும், 5 வது வினாவில் விளைதிறனானது (effective) என்பதற்குப் பதிலாக வினைத்திறனானது(efficient) எனவும், 7வது வினாவில் பெறப்பட்ட என்பதற்குப் பதிலாக பெற்ற எனவும் ,கடத்தப்படுகின்றன(passed) என்பதற்குப் பதிலாக ஊடுகடத்தப்படுகின்றன (transkmssion) எனவும், மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதற்குப் பதிலாக மாற்றம் ஏற்படுகின்றது எனவும், 9வது வினாவில் கொம்புருத் தாவரங்கள் என்பதற்குப் பதிலாக கொம்புத் தாவரங்கள் எனவும், 12வது வினாவில் முதிர்ச்சியின்போது என்பதற்குப் பதிலாக முதிர்ச்சிப் பருவத்தில் எனவும், 13 வது வினாவிலும் 39 வது வினாவிலும் வினைத்திறனாக என்பதற்குப் பதிலாக திறமையாக எனவும், கொடுக்கப்பட்டிருந்தன.
13வது வினாவில் திசைகோட் சேர்க்கை என்பதற்குப் பதிலாக திசைமுகப்படுத்தல் எனவும் ,16வது வினாவில் ஒளித்தொகுப்புச் செய் யும் என்பதற்குப் பதிலாக ஒளித்தொகுப்பி எனவும், 17வது வினாவில் விடுவிக்கத் துண்டப்படும் என்ப தற்குப் பதிலாகத் தூண்டப்படும் எனவும், 18வது வினாவில் அமைவிடம் என்பதற்குப் பதிலாக இருக்கும் இடம் எனவும் ,21வது வினாவிலும் 44வது வினாவிலும் சமிக்ஞை என்பதற்குப் பதிலாக சைகை எனவும், கொடுக்கப்பட்டிருந்தன.
22வது வினாவில் இயற்கையாகக் கொல்லும் என்பதற்குப் பதிலாக இயற்கைக் கொல்லும் எனத் தரப்பட்டுள்ளது. 24 வது வினாவில் பார்வைப் புலன்பரப்பு எனபதற்குப் பதிலாக கட்புலப் புலன்பரப்பு எனவும் ,31 வது வினாவில் தேவையானவையாகும் என்பது போதியனவாகும் எனவும், 40வது வினாவில் படுக்கை என்பது படுகை எனவும், வந்துள்ளது.
44 வது வினாவில் சுரப்பிகளை என்பது சுரப்பிகளையும் எனவும் 47வது வினாவில் தலைகீழாகக் காணப்படலாம் என்பது தலைகீழாக்கப்படலாம் எனவும், 48 வது வினாவில் தத்திகளினுள்ளும் தாவரங்களினுள்ளும் என்பது தத்திகளிலும் தாவரங்களிலும் எனவும் தரப்பட்டுள்ளன.
வினா இல 20 இல் ஆங்கில. சிங்கள மொழிமூலங்களில் பயன்படுத்தப்பட்ட சோணையறை என்ற ஒரு சொல்லுக்குப் பதிலாக சோணையறை கூடம் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற இன்னும் பல பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இவை சில உதாரணங்கள் மட்டுமே. மேற்படி தவறுகள் மிகநுட்பமானவை. மாணவர்களது பெறுபேற்றைப் பாதிப்பவை. மயக்கமான நிலையை உண்டுபண்ணுபவை. முக்கியம் .பிரதானம்: வினைத்திறன் விளைதிறன்: கடத்தல். ஊடுகடத்தல்: உள்ள கொண்ட: முதிர்ச்சியின்போது முதிர்ச்சிப் பருவத்தில் திசைமுகப்படுத்தல். திசைகோட்சேர்க்கை: திறமையாக வினைத்திறனாக: அமைவிடம் இருக்கும் இடம்: சமிக்ஞை. சைகை : கட்புல. பார்வை : போதிய. தேவை போன்ற சொற்கள் ஒத்த சொற்களல்ல. வெவ்வேறு பொருள் கொண்டவை. வெவ்வேறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுபவை.
இவை தவிர, வேறு இலக்கணப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் காணப் படுகின்றன. உதாரணமாக படுக்கை என்பது படுகை எனவந்தமை எழுத்துப் பிழையாகும். பாடத்துடன் தொடர்பான நிபுணத்துவங் கொண்ட மொழிபெயர்ப்பாளர்களால் மொழிமாற்றம் செய்யப்படும் போதும் அக்கறையுடனும் , சமூகரீதியிலான பொறுப்புணர்வுடனும் வினாத்தாள்கள் செம்மை பார்க்கப்படும் போதும் அச்சுப்படி திருத்தப்படும் போதும் இத்தகைய தவறுகள் எழ நியாயமில்லை