கல்வியியல் கல்லூரிகளில் இருந்து கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெற்ற 4000 ஆசிரியர்களுக்கான நியமனங்களை கல்வி அமைச்சு எதிர்வரும் ஒக்டோபர் வரை தாமதப்படுத்தியுள்ளமையை ஆசிரியர் சங்கம் கண்டித்துள்ளது.
பாடசாலைகளில் தீவிர ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும்2015/2017 கல்வி ஆண்டில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமனங்களை தாமதப்படுத்தியுள்ளதைக் கண்டித்து ஆசியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இந்த டிப்ளோமாதாரிகள் 2013 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் எழுதியவர்கள். ஆனால் அவர்கள் 2015 ஆம் கல்வி ஆண்டுக்கே உள்வாங்கப்பட்டனர். இதனால் இரு வருடங்களுக்கும் அதிகமான தாமதம் ஏற்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் இதனைத் தாமதப்படுத்துவதன் மூலம் மூன்று வருட பாடநெறிக்காக ஆறு வருடங்கள் செலவழிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரதேச செயலகங்கள் அடிப்படையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உள்ளீர்க்கப்பட்ட இவர்களுக்கு உரிய பிரதேச செயலக வெற்றிடங்களின் அடிப்படையில் நியமனங்களை துரிதமாக வழங்க நடடிவக்கை எடுக்க வேண்டும் என அவர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.