எதிர்வரும் திங்கட்கிழமை (7) கொழும்பின் சில பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இடம் பெறவுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக காலை 7.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ராஜகிரிய தேர்தல்கள் செயலகத்திற்கு செல்லும் வீதிகள் மூடப்படுகின்றன. அத்தோடு அப்பிரதேசத்தின் பாடசாலைகளையும் மூடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விடுத்த வேண்டுகோளுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க அனுமதி அளித்துள்ளார்.
இதன்படி, கொழும்பின் பொரல்ல, தென் கொழும்பு மற்றும் மத்திய கொழும்பு பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுவதோடு சிரி ஜயவர்தன புர வலயத்தின் ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயம், ஹேவாவிதாரண வித்தியாலயம், மற்றும் ஹேவா விதாரண கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் மேல்மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.