தேசிய கல்வி நகல் சட்ட மூலமொன்று விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்றுத் (03) தெரிவித்தார்.
162 பிரிவேனா ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தை பல தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த அரசாங்கம் நாட்டுக்கு பாராட்டக்கூடியவாறு செயற்பட்டுள்ளது. குறிப்பாக சாசன விடயத்தில் அரசாங்கத்தின் சேவை சிறப்பாக இருந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கப் பாடசாலைகளுக்கு மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கவில்லை. ஆனால் தற்போது 96 சதவீத பாடசாலைகளுக்கு மின்சார விநியோகம் உள்ளது. அதேநேரம் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் கல்வி கற்கும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு டெப் கணனிகளை வழங்குவதற்கு ஏற்றவகையில் 11 அமைச்சரவைப் பத்திரங்கள் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்துடன் நாம் இணைந்து செல்லாவிட்டால் பின்தங்கிய நாடாக இருந்துவிடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் 1500 பாடசாலை கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 5 ஆயிரம் பாடசாலைகள் நிதி உதவிகளைப்பெறும் அத்துடன் அரசாங்க பாடசாலைகளில் இனி அந்த வகையில் ஆசிரிய பற்றாக்கறை இருக்காது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.