யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தினார்.
மேலும் நாட்டின் ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் வாக்குகளாக சிறுபான்மை மக்களது வாக்குகளே உள்ள நிலையில் சரியான முடிவை சரியான நேரத்தில் சிறுபான்மை மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினம் யாழ்.ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125ஆவது ஆண்டு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இருக்கும் போது, மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை இணங்கண்டு, மாகாண ரீதியில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற நோக்கோடு செயற்பட்டது.
பிரதமரின் தூர நோக்கோடு எமது மாகாணத்திற்குரிய பாடசாலைகளை கிராம மட்டத்தில் அபிவிருத்தி செய்யவும், இப் பாடசாலையின் 125ஆவது ஆண்டில் கலந்துகொண்டுள்ளமையும் பெருமைக்குரிய விடயம்.
யுத்தம் நடைபெற்ற காலத்திலும், யுத்தத்திற்கு முன்னரும், யுத்தம் நிறைவடைந்தும் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் தான், கல்வியில் அபிவிருத்தியைக் கண்டுள்ளது. பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது என்பார்கள்.
தற்போது வட மாகாணத்தில் 6 வலயங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மருதங்கேணி பகுதியில் ஒரு வலயம் கட்டாயம் அதிகரிக்க வேண்டும். மருதங்கேணி பிரதேசம், யுத்தத்திற்கு பின்னர், பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்துப் பிரச்சினைகளும், வீதிப் பிரச்சினைகளும் காணப்படுகின்றன.
அப்பிரதேசத்திற்கு ஆசிரியர்கள் செல்ல விரும்புகின்றார்கள் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, யாழ் வலயத்திற்கு வருகின்றார்கள். மருதங்கேணி பகுதியில் ஒரு வலயம் அமைக்க வேண்டுமென்பது தொடர்பாக, கல்வி அமைச்சின் கவனத்திற்கும், பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ், 500 பாடசாலைகளில் கட்டடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளது. வடமாகாணத்தில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளன. யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில், குறைந்தது ஒரு தொகுதியில் 1 தேசிய பாடசாலையாவது அமைந்திருக்க வேண்டும். தேசிய பாடசாலை இல்லாத காரணத்தினால் மாணவர்கள், கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கிச் செல்கின்றார்கள் .
நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி வந்து படித்த வரலாறும் உண்டு. அவ்வாறான நிலையில், கிராமத்தில் உள்ள பாடசாலைகளை தரமுயர்த்த வேண்டும். 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், மத்தியில் இருந்து மாகாணத்திற்கு தருகின்றோம் என்ற அடிப்படையில் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த வேண்டும்.
வடகிழக்கு மாகாணங்களில் கல்வித் தரத்தை உயர்த்த 8 பில்லியன் ரூபா நிதியில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. போராட்டங்களில் ஈடுபட்ட தொண்டராசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளதால், ஒரு சிறந்த அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முதல் மகிந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி வரைக்கும், சிறுபான்மை இனத்தவர்கள் எவ்வாறான சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
எதிர்காலத்தில் சிறந்ததொரு தலைவரை தெரிவு செய்ய வேண்டுமாக இருந்தால், சிறுபான்மை மக்கள் அளிக்கும் வாக்குகள் பெறுமதியான வாக்குகளாக உள்ளன. பெரும்பான்மை இன மக்கள் போட்டியிட்டாலும், சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் தான், ஜனாதிபதியை தீர்மானிக்கும் சரியான முடிவை சரியான இடத்தில் எடுப்பதன் மூலம் கடந்த காலத்தில் விட்டதை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்ய முடியும் என்றார். (Thinakaran)