தொழிலுலகிற்குத் தேவையான மனிதவளத்தை உருவாக்கும் விதமாக பல்கலைக்கழக பாடநெறிகளை மாற்றியமைப்பது குறித்து சைனா ஹாபர் மற்றும் சீன வர்த்தக நிறுவனங்கள் உடன் கலந்துரையாடுமாறு தாம், உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவபீடத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவத்தார்.
வௌ்ளை யானையாக அடையாளப்படுத்தப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது பல்வேறு திட்டங்களின் காரணமாக பல நூறு தொழிற்சாலைகள் அமைய உள்ளதாக மாற்றப்பட்டுள்ளது.
உயர் கல்வி மற்றும் சுகாதாரத்துறை முதலானவற்றுக்கான புதிய தொழிநுட்பத்தின் மீது முதலீடு செய்வதற்கு கவனம் செலுத்தவேண்டிய நேரம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பில்லியன் கணக்கான ரூபாய்கள் அகுருகொடயில் பாதுகாப்பு தலைமையகம் அமைக்கவும் தேவையற்ற சிரிலங்கன் எயர் லைன்ஸ்க்கு தேவையற்ற வானூர்திகள் வாங்கவும் செலவிடப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக் காட்டினார்.
நாம் பறை அடித்துத் திரியவில்லை. ஆனால் வேலை செய்துள்ளோம். கடந்த வருடங்களில் கல்வி மற்றும் சுகாதாரத்தின் மீது ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் நாம் சுமார் 600 பில்லியனுக்கும் அதிகமான தொகையை கடந்த ஐந்து வருடங்களில் சுகாதாரத்துறை மீது முதலிட்டுள்ளளோம் என்றும் அவர் தெரிவித்தார்
பிரதமரை அழைத்தமைக்கு எதிராக மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பல்கலைக்கழக நிகழ்வு சுமுகமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.