——————————
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அந்நாட்டுத் தேசிய கீதமான ‘God save the King’ என்பதே இலங்கையின் தேசிய கீதமாகவும் விளங்கியது. பிற்காலத்தில் இலங்கை குடியேற்ற நாடு என்ற அந்தஸ்தைப் பெற்ற பொழுதும் 1948இல் முழுமையான சுதந்திரத்தை அடைந்த வேளையிலும் நம் நாட்டுக்கெனப் பிரத்தியேகமான தேசிய கீதம் எதுவும் இருக்கவில்லை.
இந்த நிலையில் எமது நாட்டுக்கான தேசிய பாடலொன்றைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ‘லங்கா காந்தர்வ சபா’ என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காகப் பாடல் போட்டியொன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்தது. பொருத்தமான பாடலொன்றைத் தெரிவு செய்வதற்காக நடுவர் குழுவொன்றும் உருவாக்கப்பட்டது. இந்தப் போட்டியின் முடிவில் ‘ஸ்ரீலங்கா மாத்தா / யஸ பல மஹிமா / ஜய ஜய’ என்று ஆரம்பித்து ‘ஜய ஜய தத நகா / ஸ்ரீ லங்கா மாத்தா’ என முடிவடையும் பாடல் புதிய தேசிய கீதமாகத் தெரிவு செய்யப்பட்டது.
எனினும் இத்தெரிவு பரவலான முறைப்பாடுகளையும் எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் இப்பாடலை இயற்றியவரும் ( P.B. இலங்கசிங்ஹ) அதற்கு இசையமைத்தவரும் (லயனல் எதிரிசிங்ஹ) போட்டி நடுவர்குழு உறுப்பினர்களாக இருந்ததே. எனவே இத்தெரிவு நியாயமற்றது என மக்கள் கருதலாயினர்.
முதலாவது சுதந்திர தினமன்று காலையில் அப்போதைய இலங்கை வானொலி (ரேடியோ சிலோன்) இப்பாடலைத் தேசிய கீதமாக ஒலிபரப்பிய போதிலும் மக்களின் எதிர்ப்புக் காரணமாக உத்தியோகபூர்வ சுதந்திர தின வைபவத்தின் போது அது பாடப்படவில்லை. எந்தக் குறையும் கூற முடியாத அளவுக்கு அப்பாடல் தரமானதாக இருந்தபோதிலும் அதன் தெரிவில் இடம்பெற்ற முறைகேடு காரணமாக அது மக்களின் அபிமானத்தைப் பெறத் தவறிவிட்டது.
அதேவேளையில், ஓவியராகவும் கவிஞராகவும் புகழ்பெற்று விளங்கிய ஆனந்த ஸமரக்கோன் என்பவரால் இயற்றப்பட்ட ‘நமோ நமோ மாத்தா’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து வந்தது. ஆனந்த ஸமரக்கோன் இப்பாடலை 1940 ஒக்டோபர் 20ம் திகதி இயற்றியிருந்தார். தேசிய கீதமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் இதனை எழுதவில்லை. அக்காலத்தில் தான் ஆசிரியராகப் பணி புரிந்துவந்த காலி, மஹிந்த கல்லூரி மாணவர்களுக்கு ஸமரக்கோன் இப்பாடலை முதன்முதலாகக் கற்பித்தார். அதற்கான இசையையும் அவரே அமைத்திருந்தார்.
இப்பாடல் விரைவில் பிரபல்யம் அடைந்ததோடு 1946ல் இசைத் தட்டிலும் பதிவு செய்யப்பட்டது. ஆனந்த ஸமரக்கோன் தனது உதவியாளரான ஸ்வர்ணா த சில்வா என்ற பெண்ணுடன் இணைந்து பாடியே இப்பாடலைப் பதிவு செய்தார். பின்னர் அவர் வெளியிட்ட ‘கீத குமுதினீ’ என்ற பாடல் தொகுப்பிலும் இப்பாடல் இடம் பெற்றது.
‘கீத குமுதினீ’ நூலுக்குரிய அச்சகச் செலவை ஆனந்த ஸமரக்கோனினால் செலுத்த முடியாது போனதால், அதற்குப் பகரமாக அந்நூலின் பதிப்புரிமையை அந்த அச்சக உரிமையாளருக்கு அவர் வழங்கிவிட்டார். இதன் மூலம் ‘நமோ நமோ மாத்தா’ என்ற பாடலின் உரிமையும் மேற்சொன்ன அச்சக உரிமையாளர் வசமாகியது.
கொழும்பு மியூஸியஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவியர் 50 பேரைக் கொண்ட இசைக் குழுவொன்று பொது வைபவமொன்றில் ‘நமோ நமோ மாத்தா’ பாடலைப் பாடிய பின்னர் அது மக்கள் அபிமானத்துக்குரிய பாடலாக மாறியது. இலங்கை வானொலியும் அடிக்கடி அதனை ஒலி பரப்பியது. இவ்வாறு உத்தியோகபூர்வமற்ற முறையில் நாட்டின் தேசிய கீதம் என்ற அந்தஸ்தை அப்பாடல் எட்டிக் கொண்டிருந்தது.
1950ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ஜே. ஆர். ஜயவர்தன அவர்கள் ‘நமோ நமோ மாத்தா’ இலங்கையின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார். இவ்விடயம் தொடர்பாக இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க அவர்கள் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமித்தார். ‘நமோ நமோ மாத்தா’ பாடலோடு இன்னுஞ் சில பாடல்களைப் பரிசீலித்த அக்குழு, ஆனந்த ஸமரக்கோனின் பாடல் நாட்டின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தீர்மானித்தது. எனினும் அப்பாடல் இலங்கை சுதந்திரமடைய முன்னர் இயற்றப்பட்ட ஒன்றாக இருந்ததால் பாடல் வரிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் குழு சிபாரிசு செய்தது.
இதன்படி, பாடலின் பத்தாவது அடியான ‘நவ ஜீவன தெமினே’ என்பது ‘நவ ஜீவன தெமினே அப நிதின புபுது கரன் மாத்தா’ என மாற்றியமைக்கப்பட்டது. இம்மாற்றம் ஆனந்த ஸமரக்கோனின் இணக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது.
1951இல் அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த ஸர். எட்வின் விஜேரத்ன ‘நமோ நமோ மாத்தா’ நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை அறிக்கையொன்றை வெளியிட்டார். அப்பாடலின் பதிப்புரிமையை அரசு 2,500 ரூபாவைச் செலுத்தித் தன் வசமாக்கிக் கொண்டது. ஆனால் இந்தப் பணம் ஆனந்த ஸமரக்கோனுக்குக் கிடைக்கவில்லை. அவர் அதன் பதிப்புரிமையை ஒரு அச்சக உரிமையாளருக்கு ஏற்கனவே வழங்கியிருந்ததே இதற்குக் காரணம். 1952 பெப்ரவரியில் இடம் பெற்ற சுதந்திர தின வைபவத்தில்தான் ‘நமோ நமோ மாத்தா’ உத்தியோகபூர்வமாகப் பாடப்பட்டது. எம். நல்லதம்பி என்பவர் தேசிய கீதத்தைத் தமிழுக்கு மொழி பெயர்த்தார்.
1956ம் ஆண்டில் S.W.R.D. பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய கீதத்தின் வரலாற்றில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. பண்டாரநாயக்கவின் அரசாங்கம் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்டங்களும் தொழிலாளர் வேலை நிறுத்தங்களும் இனக் கலவரங்களும் இயற்கை அனர்த்தங்களும் ஒன்றன் பின் ஒன்றாய் இடம் பெறலாயின.
இந்தத் துரதிர்ஷ்ட நிலைமைக்கு நாட்டின் தேசிய கீதமே காரணம் என ஒரு சாரார் பிரசாரம் செய்து அரசியல் லாபம் தேட ஆரம்பித்தனர். பல மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்தே தேசிய கீதத்தின் மீது பழி சுமத்தப்பட்டது. படிப்படியாக ‘நமோ நமோ மாத்தா’ பாடலுக்கு எதிரான இயக்கம் வலிமை பெறலாயிற்று.
‘நமோ நமோ மாத்தா’ என்ற ஆரம்ப வரியிலுள்ள சுரங்கள் அபசகுனமானவை என்பதே பிரதான குற்றச் சாட்டாக இருந்தது. பாடலின் முதல் எழுத்தான ‘ந’ துர்ப்பாக்கியமானது என்றும் ‘ந – மோ – ந’ என வரும் முதல் மூன்று சுரங்களும் குறில்-நெடில்-குறில் என்ற ஒழுங்கில் வருவது அபசகுனத்திற்குரியது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆனந்த ஸமரக்கோனுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தின. அவர் தனது பாடலுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் தவறானவை என்பதை நிரூபிப்பதற்காகப் பல பகிரங்க சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அத்தோடு செய்திப் பத்திரிகைகளில் இடம் பெற்ற பல விவாதங்களிலும் கலந்து கொண்டார். அதே காலத்தில் அவர் அதிக பணக் கஷ்டத்திற்கும் ஆளாகியிருந்தார். அவர் மேற்கொண்ட கலை முயற்சிகள் எதுவும் வர்த்தக ரீதியில் வெற்றிபெறத் தவறிவிட்டன. இதனாலும் அவர் மனமுடைந்து போயிருந்தார்.
1959 செப்டம்பரில் பிரதமர் பண்டாரநாயக்க சுட்டுக் கொலைசெய்யப்பட்டதும் நிலைமை மேலும் மோசமாகியது. தேசிய கீதத்துக்கு எதிரானவர்கள் இக்கொலையையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். 1960 ஜூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமோக வெற்றி பெற்று பண்டாரநாயக்கவின் மனைவி திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். அதன் பிறகு ‘நமோ நமோ மாத்தா’ வுக்கு எதிரான இயக்கத்திற்கு அரசாங்கம் செவிசாய்க்கத் தொடங்கியது.
நாட்டின் பிரச்சினைகளுக்கு தேசிய கீதம்தானா காரணம் என்பதை ஆராய்ந்து தீர்மானிப்பதற்கென நிபுணர்களைக் கொண்ட கமிட்டியொன்றை அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்க நியமித்தார். பிரச்சினைக்குத் தீர்வாக தேசிய கீதத்தின் ஆரம்ப அடியான ‘நமோ நமோ மாத்தா’ என்பது ‘ஸ்ரீ லங்கா மாத்தா’ என மாற்றியமைக்கப்பட வேண்டும் என அக் கமிட்டி சிபாரிசு செய்தது.
இதனை ஆனந்த ஸமரக்கோன் கடுமையாக எதிர்த்ததோடு தனது ஆட்சேபனையைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். எனினும் அதற்குச் செவி மடுக்காது 1961 பெப்ரவரியில் அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக தேசிய கீதத்தின் ஆரம்ப அடியை மாற்றி அமைத்தது. பாடலின் பதிப்புரிமையை அரசு பெற்றுக் கொண்டிருந்ததால் ஸமரக்கோனினால் இது தொடர்பாக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
தனது அபிமானப் பாடலின் முதல் அடி மாற்றியமைக்கப்பட்டதை ஆனந்த ஸமரக்கோனினால் கொஞ்சமேனும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘என்னுடைய தலையை நீக்கிவிட்டு வேறு ஒன்றைப் பொருத்திவிட்டார்களே’ (මගේ ඔළුව ගලවලා වෙන එකක් හයි කරලා) என அவர் தனது நெருங்கிய உறவினர்கள் பலரிடம் விரக்தியோடு முறைப்பாடு செய்திருக்கிறார்.
Times of Ceylon பத்திரிகைக்கு அவர் எழுதியனுப்பிய குறிப்பு ஒன்றில் ‘தேசிய கீதம் சிரச்சேதம் செய்யப்பட்டிருக்கிறது. அது அந்தப் பாடலை மாத்திரம் சின்னாபின்னப்படுத்தவில்லை. பாடலாசிரியரின் வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டது. நான் விரக்தியடைந்து மனம் உடைந்து போயிருக்கிறேன். பணிவுமிக்க பாடலாசிரியர் ஒருவருக்கு இவ்வாறான அநியாயம் செய்யப்படும் ஒரு நாட்டில் வாழவேண்டி ஏற்பட்டது ஒரு துரதிர்ஷ்டமே. அதைவிட மரணம் மேலானது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு மனமுடைந்துபோன ஆனந்த ஸமரக்கோன் 1962 ஏப்ரல் 5ம் திகதி தனது அறையினுள் தற்கொலை செய்துகொண்டார். தூக்க மாத்திரைகளை அளவுக்கு மீறி உட்கொண்டதே மரணத்திற்குக் காரணம் என மரண விசாரணையின் போது தெரிய வந்தது. தனது பாடல் சிதைக்கப்பட்டது பற்றி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் டட்லி சேனாநாயக்கவுக்கு அவரால் எழுதப்பட்ட முறைப்பாட்டுக் கடிதமொன்றும் அப்போது அவரது மேசையின் மீது இருந்திருக்கிறது.
© Hafiz Issadeen – அரும்பு – 43