இருபத்தோராம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்விமுறையை ஏற்படுத்தி, தென்கிழக்கு ஆசியாவிலே சிறந்த தொழில் நுட்பம் மற்றும் கல்வியுடைய பாடசாலை கட்டமைப்புக்களை உருவாக்குவதே எமது நோக்கமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்
மாணவர்கள் மத்தியில் தலைசிறந்த பண்பு, அறிவு, ஆளுமைகளை வளர்க்கும் நோக்கில் ‘அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ செயற்திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் 250பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட 250திட்டங்களை ஒரேநாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நாடு தழுவிய தேசிய நிகழ்வின் 2ஆம் கட்ட நிகழ்வு நேற்று (4) கண்டி ,பெனிதெனிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். இதன் போது கண்டி பெனிதெனிய ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் சகல வசதிகளையும் கொண்ட புதிய கேட்போர் கூடம் , விரிவுரை தொகுதி, புதிய வகுப்பறைகள் என்பன கையளிக்கப்பட்டன. அதுபோன்று வடக்கு கிழக்கு உட்பட ஏனைய மாவட்டங்களில் நேற்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏனைய நிகழ்வுகளும் பிரதமருக்கு காணொளி மூலம் காட்சிப்படுத்தப் பட்டது.
ஆசிரியர் மத்திய நிலையங்கள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆசிரியர் கல்லூரிகளுக்கு மடி கனணிகளும் வழங்கப்பட்டன இறுதியாக கல்லூரி பீடாதிபதியினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
பிரதமர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
அண்மித்த பாடசாலை சிறந்தபாடசாலை திட்டத்தின் கீழ் 250 பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பேராதனையில் தேசிய பாடசாலை ஒன்றை அமைக்கவுள்ளோம். பல்கலைக்கழக விரிவுரயாளர்களின் உதவியுடன் அது அமைக்கப்படும். இப்பாடசாலைகள் ஸ்மார்ட் வகுப்பறை என்ற முறையைச் சார்ந்திருக்கும். இதற்கு புத்தகம், வைட்போர்ட், கடதாசி, கரும்பலகை, வெண்கட்டி, மார்க்கர் போன்ற எந்த எழுது கருவிகளும் தேவையில்லை. ஸ்மார்ட் புகையிரத சேவையும் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது. அதுபோல் இன்றுகல்வி நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.