ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 331,694 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். அவர்களுக்காக 2936 பரீட்சை மண்டபங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இப்பரீட்சை வினாத்தாள் பகுதி 1 – 9.30- 10.30 வரையும்
வினாத்தாள் பகுதி 2 – 11.00-12.15 வரையும் இடம்பெறும்.
காலை 9 மணிக்கு பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு நுழைவதுடன் கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்படவுள்ளதால் காலை 8.45க்கு பரீட்சை நிலையங்களுக்கு வந்துவிடவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு தோன்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஒன்லைன் மூலமான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்தல் வேண்டும் என அமைச்சு கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் இந்த படிவம் கட்டாயமானதல்ல என்பதோடு இதனை நிரப்புவதன் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் பரீட்சை ஆரம்பமாக முன்னர் அவ்வாறான படிவம் நிரப்ப ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு பெற்றோர்கள், மாணவர்களை பாடசாலை அறிவுறுத்தலுக்கு இணங்க கொவிட் 19 நடைமுறை பேணி உரிய நேரத்திற்கு பரீட்சை மண்டபத்துக்கு அழைத்துச் செல்வது கட்டாயமாகும்.
ஊரடங்கு பிரதேசங்களிலுள்ள பரீட்சார்த்திகளுக்கு அவர்களது பிரதேசங்களிலே விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.