பாடசாலை பிள்ளைகளுக்கு பசும்பால் வழங்கும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (23) முற்பகல் இரத்தினபுரி, கலவான, கஜூகஸ்வத்த, சாஸ்திரோதய வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டளவில் இலங்கையில் பசும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கத்துடனும் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் காலையில் பசும்பால் பக்கற் வழங்கும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய “பால் உற்பத்தியில் தன்னிறைவடைந்த தேசம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகம் மற்றும் கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி அமைச்சு மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சு ஆகியன இதற்கு பங்களிப்பு அளிக்கின்றது.
சுமார் 1500 பாடசாலை பிள்ளைகள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியதுடன், இந்த செயற்திட்டத்துடன் இணைந்ததாக கலவான பிரதேச பாற்பண்ணையாளர்களுக்கு பல்வேறு வசதிகளும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டது.
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அகில விராஜ் காரியவசம், பி.ஹெரிசன், சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க, துனேஷ் கண்கந்த, அதுல குமார ராகுபத்த, பானு மனுப்பிரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.