வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், குறிப்பிட்ட விண்ணப்பதாரிகள் ஒரு வருடத்திற்கும் அதிக காலம் தொழில் வாய்ப்பற்றவராக இருப்பதாகவும் விண்ணப்பிக்கும் பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர பதிவைக் கொண்டவராக இருப்பதாகவும் கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ள பட்டப் பாடநெறி ஒன்றை அல்லது அதற்கு சமமான தகைமையைக் கொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டிப்ளோமா பாடநெறி ஒன்றை 2019.12.31ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்துள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
அந்த வகையில் 2019.01.01ஆம் திகதி முதல் 2019.12.31ஆம் திகதி வரை பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ள குறிப்பிட்ட காலப்பகுதியில் (பட்டம் பெற்ற திகதி முதல்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப வேலை வாய்ப்பற்றிருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.