பட்டதாரி பயிலுனர் நியமனம்:
பட்டதாரிகள் மீண்டும் ஏமாற்றப்பட்டனரா?
பட்டதாரி பயிலுனர் நியமனத்திற்கான முன்னெடுப்புக்களை இரு மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் அல்லது ஜனாதிபதி பதவியேற்று சரியாக நூறு நாட்கள் அண்மித்த நிலையில், பட்டதாரிகளுக்கான நியனமங்கள் குறித்த வேலைத்திட்டத்தை கையிலெடுத்தது.
2020 பெப்ரவரி 7 ஆம் திகதியே விண்ணப்பங்கள் கோரப்பட்டன. விண்ணப்ப முடிவுத்திகதியாக 14 ஆம் திகதி குறிப்பிடப்பட்டது. அடுத்த தினம் விண்ணப்ப முடிவுத் திகதியை 20 ஆக நீடித்து அறிவித்தல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து பட்டதாரிகளின் வயது எல்லையை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, பெப்ரவரி 9 ஆம் திகதி வயதெல்லையை 45 ஆக அதிகரித்து ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டது.
பெப்ரவரி 10 ஆம் திகதி குறித்த விண்ணப்பத்தில் காணப்பட்ட வேலையின்றி ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதி என்பதை கவனத்தில் கொள்ளத்தேவையில்லை என்ற விவகாரம் விளக்கப்பட்டு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பெப்ரவரி 25 ஆம் திகதி அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன, பட்டதாரி பயிலுனர் நியனத்திற்கான செயற்றிட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். பாராளுமன்றைக் கலைப்பதற்கான ஏற்பாடுகளை முன்வைத்தே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
பட்டதாரி பயிலுனர் நியமனம் மற்றும் ஒரு லட்சம் வேலை வழங்கல் முதலான திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க தாமதித்த் அடுத்து பாராளுமன்றைக் கலைப்பதற்கு முன்னர் இவற்றை பூர்த்தி செய்து கொள்ள முடியாது என்று பலரும் அராசங்கத்தைச் சாடத் தொடங்கினர்.
எனவே, இந்நியமனங்கள் வழங்கப்படும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படாதிருக்க ஒரு கட்டத்தில் அரசாங்கம் தீர்மானித்த போதிலும் பாராளுன்றைக் கலைத்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதிக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாக வேறு வழியின்றி பாராளுன்றம் கலைக்கப்பட்டது.
பாராளுன்றம் கலைக்கப்பட்ட போதிலும் ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டங்களை முன்கொண்டு செல்வதற்கு அனுமதி வேண்டி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபட்பட்டன. அரசு சார்பாகவும் வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் சார்பாகவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஒருவர் (தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவாளராக இருக்க வேண்டும்) இத்திட்டங்களை ஆணைக்குழு தடுக்காது என்று நம்பிக்கை வெளியிட்டார்.
இதனை பிடியாக்க் கொண்டு இத்திட்டத்தை முன்னெடுக்க அரசு தீர்மானித்து. எனினும் கால அவகாசம் குறைவாக இருப்பதனால், நேர்முகத் தேர்வு இன்றி நேரடியாக நியமனங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. கடிதம் கிடைத்து 3 நாட்களுக்குள் நியமன நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும் 7 நாட்களுக்குள் இணைய வேண்டும் என்றும் நிபந்தனைகளுடன் இக்கடிதங்கள் அனுப்ப்பட்டன.
பெப்ரவரி 28 ஆம் திகதியே கடிதங்கள் தபாலிடப்பட்டன. விரைவாக கடிதங்களை வினியோகிப்பதற்காக ஸ்பீட் விரைவுத் தபாலிடப்பட்டன. மார்ச் முதலாம் திகதி ஞாயிற்றுக் கிழமையை தபால் ஊழியர்களுக்கு வேலைதினமாக மாற்றப்பட்டு கடித வினியோகம் துரிதப்படுத்தப்பட்டது.
ஆனால் மார்ச் 1 ஆம் திகதி யாருக்கும் கடிதங்கள் கிடைக்கவில்லை. மார்ச் 2, 3 ஆம் திகதிகளில் நியமனக் கடிதங்கள் கிடைத்தன.
எனினும் மார்ச் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் பாராளுன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து அரசாங்கம் பட்டதாரி பயிலுனர் நியமன திட்டத்தின் முதலாவது கட்டத்தை நிறைவு செய்துவிட்டதாகவும் இரண்டாம் கட்டம் தேர்தலின் பின்னர் மே மாதமளவில் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியிலேயே நேற்று 4 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்நியமனங்களை இரண்டு மாத்திற்கு நிறுத்தி வைக்குமாறு அரசிடம் தான் வேண்டுகோள் விடுப்பதாக அறிவித்தார்.
மகிந்த தேசப்பிரியவின் வாக்கியங்களை வைத்து நோக்கும் சிலர் நியமனங்கள் ரத்தாகுமா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும். இரண்டு மாதங்களுக்கு பிற்போடுமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை மாத்திரமே முன்வைத்துள்ளார் என தெளிவுபடுத்த முற்படுகின்றனர்.
எனினும், தேர்தல் சட்டங்களுக்கு ஏற்ப கட்சிக்கோ குறித்த நபருக்கோ அரசியல் ரீதியான ஆதாயம் ஏற்படும் எந்த நியனத்தையோ திட்டத்தையோ தடுக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளது. அதன் அடிப்படையிலேயே மகிந்த தேசப்பிரிய இவ்வேண்டுகோளை அரசாங்கத்தின் கௌரவத்தைக் கருத்திற் கொண்டு முன்வைத்தார். உண்மையில் இந்நியமனங்கள் எதுவும் தற்போது செல்லுபடியற்றது என்பதே அவரது கருத்தின் சாரம்சம். கடந்த அரசாங்த்தின் போது வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர் நியனமத்தின் போதும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இதே நடைமுறையையே கடைப்பிடித்தது.
அரசாங்கம் அல்லது ஜனாதிபதி பதவியேற்று ஆரம்ப நாட்களை சும்மா கழித்துவிட்டு பாராளுன்றத்தை கலைப்பதற்கான இறுதிக் கட்டத்தில் இந்நியமனங்களை வழங்க எடுத்த முயற்சி இன்னொருமுறை பட்டதாரிகளை மிகுந்த ஏமாற்றுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த ஏமாற்றுக்கு அரசாங்கம் உத்தியோக பூர்வமாக பதில் செல்லும் தேவை எழுந்துள்ளது.
இந்த நியமனத்திற்கு என்ன நடக்கும் என்பதை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இன்று மாலை இடம்பெறவுள்ள அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அரசாங்கம் சார்பில் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
நியனமத்தை இரு மாதங்களுக்கு ஒத்தி வைப்பதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.