க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றுக்குத் தோற்றும் மாணவர்களுக்கான வசதிகளை ஒழுங்குபடுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் என்பன இணைந்து பரீட்சை ஒன்றிணைந்த செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்துள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையம், பரீட்சைத் திணைக்களம் முப்படை மற்றும் பொலிசார் முதலான பிரிவினருக்கிடையில் தொடர்பாடலை மேம்படுத்தும் வகையில் இந்த செயற்பாட்டு மையம் இயங்கும்.
எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை இந்த ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையம் தொழிற்படும்.
இக்காலப்பிரிவில், ஏதேனும் ஒரு விபத்து அல்லது அனர்த்தம் காரணமாக பரீட்சைக்கு தோற்ற முடியாத தடை ஏற்படும் எனில் அந்த நிலையத்தை அணுக முடியும். 117 மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றின் ஊடாக 24 மணிநேரமும் அழைப்பை ஏற்படுத்தி தொடர்பு கொள்ள முடியும்.
பரீட்சை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இவ்விலக்கத்தை அழைக்க முடியும்.
அனர்த்தம் ஒன்றின் போது முகங்கொடுக்க தேவையான வழிகாட்டல்களை இந்த மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை www.dmc.gov.lk எனும் இணையத்தள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.