இந்த சந்தர்ப்பத்தைக் கருத்தில் கொண்டு பரீட்சைத் திணைக்களம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இச்செயலணியின் கூட்டம் நேற்று (27) நடைபெற்றது.
அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லுதல், வங்கிகளின் கடன் தவணைகளுக்கு சலுகை வழங்கல், அத்தியாவசிய உணவுப் பொதி வினியோகம் முதலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போதே பரீட்சைகள் பிற்போடுமாறு பசில் ராஜபக்ஷ அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
க.பொ.த உயர் தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் முடிவு பெறவுள்ளது. க.பொ.த உயர் தரப் பரீட்சை தவிர்ந்த ஏனைய அனைத்துப் பரீட்சைகளையும் பரீட்சைத் திணைக்களம் ஏற்கனவே பிற்போட்டுள்ளது.
உயர் தரப் பரீட்சைகளை பிற்போடும் சாத்தியம் இல்லாத போதிலும் ஏனைய பரீட்சைகள் தொடர்ந்தும் பிற்போகும் என தெரியவருகிறது.
பல்கலைக்கழகங்களும் பரீட்சைகளை ஒத்திவைத்துள்ளன. விரிவுரைகளை ஒன்லைின் நடாத்தும் செயன்முறையை பல பல்கலைக்கழகங்கள் ஆரமபித்துள்ளன.
இதற்கிடையில் எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக தொலைக் கல்வி நிலையத்தின் பரீட்சை ஒன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. பரீட்சையை பிற்போடுமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் எவ்வாறேனும் பரீட்சையை நடாத்தி முடிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகவும் பரீட்சையை பிற்போட முடியாது என தெரிவித்துள்ளதாகவும் பரீட்சார்த்திகள் குற்றம் சாட்டியுள்ளனர்.