ஹொரவ்பொத்தான கிரலாகல புரான விகாரையொன்றின் மீது ஏறி நின்று கொண்டு புகைப்படம் எடுத்த சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர்கள் தொடர்பில் விரிவாக விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுர புராதன சின்னங்கள் அடங்கிய வலயத்தில் உள்ள கிரலாகலவுக்குப் பொறுப்பான தொல்பொருள் அதிகாரியினால் ஹொரவ்பொத்தான பொலிஸில் இன்று (22) மாலை முன்வைத்த முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த ஒரு தினத்தில் கிரலாகல புராதன வனப் பகுதியில் அனுமதியின்றி பிரவேசித்து மிகப் புராதன விகாரையொன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு புகைப்படம் எடுத்தவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களப் பணிப்பாளர் பி.பி. பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான விசாரணைகள் ஹொரவ்பொத்தான பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்றது.
சமூக மதஸ்தலங்களின் புனிதத் தன்மையைப் புரிந்து கொள்ளாத இதுபோன்றவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் பௌத்த தொரதுரு கியமனய அமைப்பு முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது. (DailyCeylon)