பாடசாலைகளை திறக்க வலயக் கல்விப் பணிப்பாளர்களே ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் அவர்கள் மெழுகு சீலைக்குள் ஒழிந்து கொண்டுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சாடியுள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு, பாடசாலைகளை திறப்பது மூடுவது முதலானவற்றுக்கு திகதிகளைக் குறிப்பதோடு நின்று விடுவதாக அவர் குற்றம் சாட்டினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அக்கரை செலுத்தவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
“வலயக் கல்வி அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அதன் பணிப்பாளர்கள் தான் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகின்றனர். ஆனால் அவர்கள் மெழுகு சீலைக்குள் உள்ளனர். முதலாவது அவர்கள் அலுவலகங்களைத் திறக்க வேண்டும். அதன்பிறகு தான் அடுத்த வேலைகளுக்கு செல்ல வேண்டும். கல்வி அமைச்சு திகதிகளைத் தீர்மானிப்பதை மாத்திரமே செய்கிறது. குறிப்பிட்ட தினத்தில் பாடசாலைகளைத் திறக்கிறோம். ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேண்டும் என்று அறிவிப்பதை மாத்திரமே செய்கின்றது.
முதலில் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றே நான் கூறுகிறேன்”