மேல் மாகாணம் மற்றும் குருணாகல் மாவட்ட சில பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகக் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
சுமார் 6000 மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் இன்று 100 க்கும் குறைவான மாணவர்களே வந்திருந்ததாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் அந்த பாடசாலைகளில் சுகாதாரவழிமுறைகளைப் பேணி கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பாடசாலைகளில் ஆசிரியர் வரவும ்மிகவும் குறைந்து காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இன்றைய நிலமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
“நாங்கள் பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டாம் என்று கூறவில்லை. பாடசாலைகளை ஆரம்பிப்பதாயின் அது தொடர்பாக பெற்றாரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றே நாம் குறிப்பிட்டு வருகிறோம். தற்போது தரம் 6-13 அனைத்து மாணவர்களையும் வரவழைக்க தேவையில்லை என்று நாம் வலியுறுத்தினோம். தரம் 11 க்கு மேல் உள்ள மாணவர்களை முதற்கட்டமாக வரவழைப்போம் என்று கூறினோம்.
இன்று என்ன நடந்துள்ளது?.
கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், அரசாங்கம் கூறிய எந்த விடயத்தையும் பெற்றார் நம்பவில்லை.
மத்திய மாகணத்தை எடுத்து நோக்கினால் அனைத்து பாடசாலைகளினதும் தகவல்கள் எம்மிடம் உள்ளன. அவற்றில் 100 க்கும் குறைவான மாணவர்களே வருகை தந்துள்ளனர். சில பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்களே வந்துள்ளனர். இவை 4000 -5000 மாணவர்கள் கொண்ட பாடசாலைகள். ஏனைய பிரதேசங்களிலும் நிலமை அவ்வாறுதான் உள்ளது. பெற்றார் அரசாங்கத்தின் கருத்துகு்களை நம்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இதற்கான ஒழுங்கான திட்டமிடல் தேவை என்பதையே நாம் தொடர்ச்சியாக கூறிவருகிறோம்.
எனினும், மாணவர்களின் வருகை குறைந்திருந்தாலும் ஆசிரியர்களின் வருகை நூற்றுக்கு நூறு காணப்பட்டதாக இலங்கை பொதுஜன கல்விச் சேவை சங்கத்தின் தலைவர் திருமதி வசந்தா ஹன்தபான்கொட தெரிவித்துள்ளார்.
.