பாடசாலைகளை நான்கு கட்டங்களாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் இடம்பெற்று வந்த கலந்துரையாடல்கள் மற்றும் கல்வி அமைச்சின் ஆலோசனைகளுக்குமைய பாடசாலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் முதல் கட்டத்துக்கான நிபந்தனைகள் தொடர்பாக நேற்று (02) சகல மாகாணங்களதும் ஆளுநர்களுக்கும் கல்வி அமைச்சருக்குமிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது..
அதற்கமைய, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் சகல ஆளுனர்களதும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பாடசாலைகள் பூட்டப்பட்டிருப்பதால் பாடசாலையின் சுற்றுச்சூழல், வகுப்பறைகள், தளபாடங்கள் உள்ளிட்டவை அசுத்தமாகியுள்ளன. தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை மீண்டும் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மாகாண ஆளுநர்கள் முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளில் (1-5) ஆரம்ப பிரிவு வகுப்புக்கள், 100 மாணவர்களுக்குக் குறைவான பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களும் என 3,000 வரையான பாடசாலைகள் முதற்கட்டமாகத் திறக்கப்படவுள்ளன.
சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கமைய பாடசாலைகளை மீள திறப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.