பாடசாலைக்கு வெளிப்படையாகத் தெரியும் கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவனுக்கு பாடசாலை விலகல் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை (07) பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டு செல்லாது வழமையாக பயன்படுத்தும் புத்தகப் பையை கொண்டு சென்றுள்ளார்.
பாடசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால், மாணவனின் பாடசாலை பையை பரிசோதனை செய்யும்போது, கண்ணாடி பையை கொண்டு வரத்தெரியாதா என கேட்டு மாணவனின் புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு, பையை வீசியுள்ளனர்.
மாணவனின் தந்தை பாடசாலைக்கு உள்ளே செல்ல முடியாமையினால், சாரணர் இயக்கத்திற்குப் பொறுப்பானவருடன் இது குறித்து கதைத்துள்ளார்.
மாணவனின் குடும்ப சூழ்நிலையை புரிந்துகொள்ளாத பாடசாலை நிர்வாகத்தினர், மாணவனின் தந்தையுடன் அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, மிகவும் வறிய குடும்ப சூழலால் தனது பிள்ளையின் கல்வியை கருத்திற்கொண்டு மாணவனின் தாயார் பாடசாலைக்குச் சென்று அதிபருடன் கதைத்துள்ளார்.
அத்துடன், கண்ணாடிப் பையை கொண்டு வர வேண்டுமென்றால், மாணவனின் விலகல் பத்திரத்தை தருமாறு வேதனையுடன் தாயார் கேட்டபோது, அதிபர் வேறு ஒரு ஆசிரியர் ஊடாக மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை வழங்கியுள்ளார். இவ்வாறு பாடசாலை அதிபர் நடந்து கொண்டமையினால், மாணவனின் கற்றல் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை நிர்வாகத்தினால் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை இடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக வழிப்பாட்டுத்தலங்கள், பாடசாலைகள் என பொதுஸ்தலங்களில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அதனடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு கண்ணாடி புத்தகப்பைகள் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு இந்த புத்தகப்பையை கொள்வனவு செயவதென்பது சற்று கடினமானது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். (newshub.lk)