சீ.சீ.ரி.வி கமராவுக்கு தலா ரூ1,500 வசூலிப்பதாகவும் முறைப்பாடு
பாடசாலையின் பாதுகாப்பைக் காரணம் காட்டி மாணவர்களிடம் பணம் வசூலிக்க முடியாதென விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக பகுதிகளில் பாதுகாப்பை காரணம் காட்டி ஒரு சில பாடசாலை அதிபர்கள் பணம் வசூலிப்பது தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு பெற்றோர்கள் கொண்டுவந்ததையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய, ஊவா, சப்ரகமுவ பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று விசேட அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது பாடசாலைகளில் வரவு படிப் படியாக அதிகரித்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சில மலையக பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களை காட்டி சீ.சீ.டி.வி கெமராக்கள் பொருத்த வேண்டும் என்று கூறி அதிபர்கள் பணம் அறவிடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதுவும் ஒரு மாணவனிடம் 1500.00 கொண்டு வருமாறும் பணித்துள்ளனர். இது முறையற்ற ஒரு நடத்தையாகும்.இது தொடர்பாக நான் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து சுற்று நிருபம் ஒன்றை அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருக்கின்றேன்.
(Thinakaran)