ஒன்லைன் கற்பித்தலில் இருந்து விலகியிருத்தல் உட்பட தமது போராட்டம் தொடரும் என ஆசிியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இன்று 30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. ஆர்ப்பாட்டப் பேரணியை அடுத்து ஜனாபதிபதியின் மேலதிக செயலாளர்கள் மூவருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் தொலைபேசி வழியாகக் கலந்து கொண்டிருந்தார். இதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தமது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளன.
தற்போதைய போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அதேவேளை, பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராகவுள்ளதாக ஆசிரியர் தொழில்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அடுத்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் மிக விரைவில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தை கலந்துரையாடல் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முன்னுரையாக அமைந்ததாக சங்கங்கள் அறிவித்தன.
எதிர்வரும் வாரங்களில் சாதாரண தர மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சை தயார்படுத்தல் மற்றும் செயன்முறைப் பரீட்சையை நடாத்துதல் முதலான செயற்பாடுகள் மற்றும் தற்போதைய உயர் தர பரீட்சை விண்ணப்பம் முதலானவற்றில் தமது நிலைப்பாடு என்ன என்பதை, அரசாங்கத்தின் நடவடிக்கைககளின் அடிப்படையில் தீர்மானித்து அறிவிப்பதாகவும் தொழில்சங்கங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பாடசாலைகளுக்கு பத்தாயிரம் பைபர் ஒப்டிக்ஸ் இணைய வசதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போது, அவை எந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என தாம் வினவியதாகவும் அவர்களிடம் தகவல்கள் இல்லை எனவும் தொழில்சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.