ஏற்றுமதியை அதிகரிப்பதே நோக்கம் -பந்துல
புதிய உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்க பூங்கா மற்றும் இலங்கை உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உயர் கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இறக்குமதியை வரையறுத்து உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் வலுவான பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் மற்றுமொரு நடவடிக்கையே இதுவாகும்.
இந்த திட்டம் பல கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு உத்திதேசிக்கப்பட்டுள்ளதுடன் புதிய உயிரியல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று ஹோமாகம, பிட்டிப்பன என்ற இடங்களில் நிர்மாணிப்பதற்கும் BiotechnoPlex கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும், இதற்கான ஏனைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரும், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் என்ற ரீதியில் தானும் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு இவ்வாறு அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கு அமைவாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திறைசேரி செயலாளரதும் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளரினதும் இணைத் தலைமைத்துவத்தைக் கொண்ட செயற்பாட்டு குழு ஒன்றை நியமிப்பதற்கும், சம்பந்தப்பட்ட துறையில் விசேட நிபுணத்துவத்தைக் கொண்டவர்களின் தொழில்நுட்ப குழு ஒன்றை நியமிப்பதற்கும் இதன்போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.
உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர்களின் கருத்துக்கள் மற்றும் வணிக ரீதியிலான தயாரிப்புக்களை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கு தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமான சர்வதேச மரபணு தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.