புதிய கல்விக்கொள்கையின் நிலைமை; அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு மே மாதம் அறிவிக்க பணிப்புரை
புதிய கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எதிர்வரும் மே மாதம் அறிக்கையொன்றை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் சமர்ப்பிக்குமாறு அக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இக்கொள்கைத் தயாரிப்பின் போது சம்பந்தப்பட்ட அமைச்சுக்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கல்வி ஆணைக்குழுவுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை இல்லாமல் செய்வது தொடர்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையைத் தயாரிப்பின்போது விசேட கவனம் செலுத்த வேண்டும் என பல்கலைக்கழக உபவேந்தர்கள் இங்கு வலியுறுத்தியிருந்தனர்.
அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் தேசிய அபிவிருத்தி செயல்முறையில் பொதுக் கல்வி முறை இன்றியமையாத பகுதியாக இருப்பதால், பாடசாலைக் கல்வி தொடர்பான தேசிய கொள்கைகள் திருத்தப்பட்டு விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.
கலை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 50வீதமாக அதிகரித்திருப்பது பிரச்சினைக்குரியது என்றும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
கலைப்பிரிவின் கீழ் கல்வி பயிலும் எண்ணிக்கை மற்றும் கலை பட்டதாரிகள் மத்தியில் காணப்படும் வேலையின்மை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (23) ஆராயப்பட்டபோதே மேற்கண்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டன.
இக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிப்பதற்கு மாகாண மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இரண்டாம் நிலை பாடசாலைகளில் கல்வி கற்கும்போதே மாணவர்கள் தமக்கான பாடநெறிகளைத் தெரிவுசெய்வதற்கான மாற்று ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும். இதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றும் தலைவர் தெரிவித்தார். பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தகவல் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்துவதற்கான வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக ஆங்கிலம் கற்பிப்பதை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என்றும் கல்வி தொடர்பான அதிகாரிகள் வலியுறுத்தினர்.