புவியின் உயிர்ச் சூழல் எதிர்கொள்ளும் சவால்..!
உலக பூமி தினம் இன்று (22 ஆம் திகதி) ஆகும்.
மனித குலம் தோற்றம் பெறுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி உருவானது. இப்பூமியானது ஆரம்பம் முதல் மனித அறிவியல் மறுமலர்ச்சி ஏற்படும் வரை பல சுற்றுச்சூழல் தாக்கங்களை எதிர்கொண்டுள்ளது. ஆனாலும் அண்மைக் காலம் முதல் பூமி முகம் கொடுக்கும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் பெரிதும் அதிகரித்துள்ளன.
இவ்வாறான தாக்கங்களுக்கு முன்னொரு போதுமே பூமி முகம் கொடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அதனால் பூமியின் சுற்றுச்சூழல் தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் நவீன அறிவியல் வளர்ச்சியின் விளைவா? என்ற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 1969 இல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிகப் பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து ஏற்பட்டது. அதே காலப் பகுதியில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால் பூமி மாசடைவதும் அதிகரிக்கத் தொடங்கி இருந்தது. இது தொடர்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவனம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டிருந்தது.
அந்த வகையில் அமெரிக்க சுற்றுச் சூழல் ஆர்வலர் கேலார்ட் நெல்சன் பூமியின் சுற்றுச்சூழல் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த அச்சுறுத்தலில் இருந்து பூமியின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்திருந்தார்.
அந்தப் பின்புலத்தில் 1970 ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணியொன்று ‘ஏர்த் டே நெட்வேர்க்’ என்ற அமைப்பால் நடத்தப்பட்டது. மனிதர்கள், பூமியை எவ்வளவு தூரம் சேதப்படுத்தி வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே அப்பேரணி அமைந்திருந்தது. அப்பேரணிக்கு பின்புலமாக இருந்தவர்களில் முக்கியமானவர் வேறு யாருமல்ல. சுற்றுச்சூழல் ஆர்வலர் கேலார்ட் நெல்சன் தான்.
அன்று இடம்பெற்ற புவி பாதுகாப்பு தொடர்பான ஊர்வலத்தைத் தொடர்ந்து வருடா வருடம் ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினமாக அமெரிக்கர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. அது புவியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
இதேவேளை பூமியின் சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் சவால்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருந்தன. அது உலகின் பலமட்டங்களதும் அவதானத்தைப் பெற்றது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 22 ஆம் திகதியை உலக புவி தினமாக 1990 இல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இத்தினம் உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்படும் நிலைமை உருவானது. அதற்கேற்ப வருடா வருடம் ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இவ்வருடம் ‘எங்கள் பூமியை மீளமைப்போம்’ என்ற தொனிப்பொருளை இத்தினம் கொண்டிருக்கிறது. அதாவது இயற்கை செயன்முறைகள் வளர்ந்து வரும் பசுமைத்தொழில் நுட்பங்கள் மற்றும் புதுமையான சிந்தனைகளை உலக பசுமை சூழலுக்கு ஏற்ப மீட்டெடுப்பது குறித்து கவனம் செலுத்துவதாகும். இதன் ஊடாக புவி சுற்றுச்சூழல் பாதிப்படைதல், வளி மாசடைதல், இயற்கை வளங்கள், நீர்நிலைகள் என்பவற்றின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கி நாகரிகம் வளர்க்கப்பட்டது. ஆனால் மரங்களை வளர்த்தால்தான் மகிழ்ச்சி நீடிக்கும் என்று உணரும் நிலைமை அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது. பூமியானது காடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சமவெளிகள், மிகப் பெரிய நிலப்பரப்பு என அனைத்தையும் தன்னகத்துள் உள்ளடக்கியுள்ளது. மனிதன் உள்ளிட்ட உயிரின வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது பூமி.
என்றாலும் மனிதனின் தேவைகளது அதிகரிப்பும் பொருட்களின் அதிகரித்த தேவையும் எல்லை மீறிச் செல்வதன் விளைவாக புவி சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகரித்த வண்ணமுள்ளன.
இதன் விளைவாகவே இயற்கை அனர்த்தங்களும் அண்மைக் காலமாக அதிகரித்த வண்ணமுள்ளன. இதற்கு புவி வெப்பமாதல், சுற்றுச்சூழல் மாசடைதல், சனத்தொகை பெருக்கம், கைத்தொழில் மயம் உள்ளிட்ட பல விடயங்கள் காரணங்களாக அமைந்திருக்கின்றன.
பொதுவாக ஒரு குப்பையை நிலத்தில் போட்டாலும் கூட அது பூமிக்கு செய்யும் தீமையாகவே விளங்குகின்றது. அந்தளவுக்கு பூமி பாதிக்கப்பட மனித வாழ்க்கை முறை இப்போது காரணமாகியுள்ளது. அறிவியல் வளர்ச்சி அடைந்திருந்தாலும் பூமிக்கு எதிராக அதன் வளங்களை அழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தனிநபரிடமிருந்துதான் ஆரம்பமாகின்றன. அதனால் இப்பூமியைப் பாதுகாக்கும் நடவடிக்கையும் தனி நபரிடமிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பூமியானது ஞாயிற்று தொகுதியில் அமைந்துள்ள ஒரு கோளாகும். இது சூரியனிலிருந்து 150.34 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோளானது தன்னைத்தானே சுற்றுக் கொள்வதோடு சூரியனையும் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அத்தோடு பூமிக்கான துணைக்கோளாக சந்திரன் அமைந்திருக்கின்றது. இப்பூமிக்கும் சந்திரனுக்குமிடையிலான தூரமோ 384, 400 கிலோ மீற்றர்களாகும்.
இந்த ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்கள் அனைத்தும் சூரியனை வலம் வருகின்ற போதிலும், அவை ஒன்றை ஒன்று நெருங்கிச் செல்லவோ முந்திச் செல்லவோ முடியாது. அதேபோன்று சூரியனிலிருந்து பூமி விலகிச் செல்லவோ அல்லது சூரியனை நெருங்கிச் செல்லவோ முடியாது. அதேபோன்று சந்திரனும் பூமியிலிருந்து விலகிச் செல்லவோ அல்லது பூமியை நெருங்கிச் செல்லவோ முடியாது. அவ்வாறான நிலைமை ஏற்படுவது புவியில் உயிரின அழிவுக்கு வழிவகுப்பதோடு இயற்கை அழிவுகள் ஏற்படவும் காரணமாக அமையும்.
மேலும் ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள பூமியைத் தவிர வேறு எந்தவொரு கோளிலும் மனிதன் உள்ளிட்ட உயிரின வாழ்வுக்கு ஏற்ற சீதோஷண நிலைமை உள்ளிட்ட வசதி வாய்ப்புகள் காணப்படுவதாக இற்றை வரையும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. என்றாலும் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரின வாழ்வுக்கும் ஏற்ற சீதோஷண நிலைமையையும் ஏனைய வளங்கள் மற்றும் வசதிகளையும் பூமி கொண்டிருகின்றது.
குறிப்பாக பூமி எல்லா விதமான இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் மனிதனுக்குத் தேவையான அதனை வளங்களும் உள்ளன. மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவு, உறையுள் உள்ளிட்ட அத்தனை வசதிகளையும் அளிக்கும் இடமாக விளங்கும் பூமி தற்போது 7.9 பில்லியன் மக்களுக்கும் எண்ணிறைந்த உயிரினங்களுக்கும் இவற்றை வழங்கி வருகின்றது.
இருப்பினும் மனித செயற்பாடுகளால் புவியின் இயல்புக்கு பாதிப்புகள் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் தோற்றம் பெற்றுள்ளன. குறிப்பாக புவி வெப்பமாதல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக பனிப்பாறைகள் உருகும். அதனால் கடல் மட்டம் அதிகரித்து கரையோரங்களும் சிறிய தீவுகளும் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்படும். இது பல்வேறுவிதமான பாதிப்புகளுக்கும் தாக்கங்களுக்கும் காரணமாக அமையும். இதன் விளைவாக அடுத்த நூறு வருடங்களில் சுமார் 10 பில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புவி வெப்பமாதல் அதிகரிக்கும் போது எரிமலை வெடிப்பு, நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களிலும் அதிகரிப்பு ஏற்படும் என்ற கருத்தும் உள்ளது.
அதேநேரம் மனிதன் வெளியேற்றும் காபனீரொட்சைட்டை உறிஞ்சி அவனது சுவாசத்திற்கு தேவையான ஒட்சிசனை வழங்கும் பணியை மரஞ்செடிகளும் தாவரங்களும் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் கைத்தொழில் மயமாதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தொழிற்சாலைகளின் பெருக்கம் காரணமாக மனிதன் வெளியேற்றும் காபனீரொட்சைட்டுக்கு மேலதிகமான காபனீரொட்சைட்டு உமிழ்வு பெரிதும் அதிகரித்துள்ளது. அத்தோடு காடழிப்பும் அதிகரித்திருக்கின்றது. இதன் விளைவாக காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனை வெளியிடுவதில் குறைபாடு ஏற்பட்டுள்ளதோடு புவி வெப்பமாதலுக்கும் இக்காபனீரொட்சைட்டு பங்களிக்கக் கூடியதாக உள்ளது.
அத்தோடு செயற்கைப் பசளை மற்றும் நச்சு இரசாயனப் பதாரத்தங்களின் பாவனையிலும் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் புவியின் சுற்றுச்சூழலைப் பாதிக்கவே செய்கின்றன. மேலும் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உள்ளிட்ட நச்சுக்கதிர்கள் நேரடியாகப் புவியை வந்தடைவதைத் தவிர்க்கும் பணியை ஒசோன் படலம் மேற்கொண்டு வருகின்றது. இது புவிக்கு பாதுகாப்பு கவசமாக உள்ளது.
புவியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு காரணமாக ஓஸோன் படலம் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்கள் நேரே புவியை வந்தடையுமாயின் குறிப்பாக மனிதர்கள் மத்தியில் தோல் புற்றுநோய்கள் அதிகரிக்கும். நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமடையும். மழைவீழ்ச்சி குறைவடையும். உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்படும்.
பிளாஸ்ரிக்கும் பொலித்தீனும் நிலத்திற்கும் கெடுதல்களை ஏற்படுத்தக் கூடியவையாகும். அவற்றை நிலத்தில் புதைத்தால் அவை உக்கி அழியாது காலாகாலமாக அவ்வாறாறே இருக்கும். அதன் விளைவாக நிலத்தின் வளம் தான் பாதிக்கப்படும்.
இவ்வாறான நிலையில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் பலவித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கையில் அண்மையில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளின் நான்கு வகைகள் அண்மையில் தடை செய்யப்பட்டன.
ஆகவே புவியின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அது மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களதும் இருப்புக்கு அளிக்கப்படும் பாரிய பங்களிப்பாக அமையும்.
Thinakaran 22.04.2021