இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 வது பொதுப் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் 07ம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை இடம்பெறும். தொடர்ச்சியாக 04 நாட்களுக்கு 08 அமர்வுகளாக பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் மொத்தமாக 2621 பேர் இதன்போது பலதுறைகளிலும் பட்டங்களைப் பெறவுள்ளனர் என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று (01) நண்பகல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் கூட்டமண்டபத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1 ஆம் அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் பொறியியல் பீடத்தினை சேர்ந்த 475 பேரும், 2 ஆம் அமரவில் கலைப் பீடத்தினைச்சேர்ந்த 219 பேரும் 3 ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச் சேர்ந்த 348 பேரும், 4 ஆம் அமர்வில் இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 329 பேரும், 5 ஆம் அமரவில் இஸ்லாமியக் கற்கைகள் அறிபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 313 பேரும் 6 ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 277 பேரும், 7 ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பிடத்தினைச் சேர்ந்த 348 பேரும் 08 ஆம் அமர்வில் கலை கலாசார பீட மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடங்களின் 312 வெளிவாரி மாணவர்கள் தமது பட்டங்களைப் பெறுகின்றனர் .
இந்த பட்டமளிப்பு விழாவில் 04 பேர் முதுதத்துவமானிப் பட்டங்களையும், 23 பேர் வியாபார நிருவாக முதுமானிப் பட்டங்களையும், 02 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவினையும் பெறவுள்ளதுடன் பேராதனை பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் பேராசிரியர் எஸ் தில்லைநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் ஜௌபர் சாதிக் ஆகியோருக்கு கௌரவ கலாநிதிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த பட்டமளிப்பு விழா நிகழ்வின் முதல் நாளன்று கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவும், இரண்டாவது நாளன்று உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் உம், மூன்றாவது நாளன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவும், இறுதி நாளன்று றுகுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க ஆகியோர் விசேட அழைப்பாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர் என்றார்.
மேலும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் கொவிட் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றவேண்டும். என்றும் ஒவ்வொருவரும் முகக்கவசங்களை அணிந்துவருவதுடன் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அட்டையினையும் கொண்டுவரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.