அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகரவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர பெப்ரவரி 2017 முதல் இப்போது வரை ஊவ வெல்லஸ்ஸவின் துணைவேந்தராக கடமையாற்றி வரும் நிலையிலேயே அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் அக்ரபோதி வித்யாலயாவில் தனது ஆரம்பக் கல்வியையும், கொழும்பின் நாலந்தா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் பெற்ற இவர், 1982 ஆம் ஆண்டில் மொஸ்கோ உள்ள பெற்ரஸ் லுமும்பா நட்பு பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
பின்னர் 1993 இல் லுமும்பா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.
தேசிய அறிவியல் அறக்கட்டளையில் அறிவியல் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பேராசிரியர் ரத்னசேகர, 1996 ல் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகச் சேர்ந்தார், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையின் முதல் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
உலக வங்கியின் நிதியுதவி பெற்ற இரண்டு உயர்கல்வித் திட்டங்களின் (நவம்பர் 2005 முதல் ஜூன் 2011 வரை) மற்றும் உலக வங்கியின் உதவியுடன் கூடிய பாடசாலை கல்வித் திட்டத்தின் (ஜூன் 2011 முதல் டிசம்பர் 2015 வரை) துணை பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர பெப்ரவரி 2017 முதல் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி வருகிறார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுச்சூழல் வேதியியல், அறிவியல் கல்வி மற்றும் உயர்கல்வியில் தரம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி நடத்தி வரும் பேராசிரியர் ரத்னசேகர, 2016 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி ஆவணங்களுக்கான ஜனாதிபதி விருதையும், 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கான தேசிய அறிவியல் அகடமி விருதையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.