15 ஆயிரம் பட்டதாரிகள் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பொதுத்துறை பணிகளில் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கோப்பை பால் வழங்கும் தேசிய நிகழ்வை ஆரம்பித்து வைத்து பேசிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாகவே கல்வித்துறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம், 13 வருட கட்டாய கல்வித் திட்டம் மற்றும் வேறு பல திட்டங்கள் இதில் உள்ளடங்குவதாக அமைச்சர் அங்கு மேலும் கூறினார்.
காலையில் எந்தவித ஆகாரமும் இன்றி பல மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றனர். எனவே இந்த இலவச பால் வழங்கும் திட்டம் அந்த வகையில் சிறப்பானதாகும். அத்துடன் கிராமப்புறங்களில் உள்ள பல மாணவர்களுக்கு போஷாக்கின்மை குறைபாடுகள் உள்ளன. எனவே அவர்களுக்காக இலவச பகலுணவு வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
நாம் பதவிக்கு வருமுன் 60 சதவீத பாடசாலைகளுக்கு மட்டுமே மின்சாரம் இருந்தது. இப்போது 98 சதவீத பாடசாலைகளுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. அத்துடன் 3 ஆயிரம் நடமாடும் விஞ்ஞான கூடங்களையும் 40 ஆயிரம் கழிவறைகளையும் பாடசாலைகளுக்கு கட்டிக் கொடுத்திருக்கிறோம். அத்துடன் கல்வித்துறைக்கு தேவையான பல பௌதீக வளங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். (Thinakaran)