– 60 வருடமாக இருந்து வந்த நடைமுறையில் மாற்றம்
– பொதுமக்கள் தினத்தில் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை
– அமைச்சர்கள், அதிகாரிகள் கடமையில் இருப்பது அவசியம்
அரச நிறுவனங்களில் பொதுமக்கள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த புதன்கிழமையை, திங்கட்கிழமையாக மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெற்ற இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கடந்த 1960கள் முதல் 60 வருடமாக இருந்து வந்த குறித்த நடைமுறையை, நீண்ட கலந்துரையாடலின் பின்னர் மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர மாநாட்டிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளை பெறுவதற்காக மக்களுக்கு இலகுவான வகையில் புதன்கிழமை, தற்போது பொதுமக்கள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், திங்கட்கிழமையை பொதுமக்கள் தினமாக பிரகடனப்படுத்தினால், மக்களுக்கு மிகவும் இலகுவாக அமையும் என யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. அதற்கமைய இன்றிலிருந்து திங்கட்கிழமையை பொதுமக்கள் தினமாக பிரகடனப்படுத்தவும், அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த தினத்தில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியம் எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
குறிப்பாக அமைச்சரவை கூட்டம் மற்றும் பாராளுமன்ற தினங்கள், புதன்கிழமைகளில் இடம்பெறுவதனால், மக்களின் குறைகளை கேட்டறிவதில் சிக்கல்கள் எழுவதால் இரு விடயங்களிலும் கவனம் செலுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை கருத்திற்கொண்டு, இம்முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாக, இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில் தெரிவித்தார்.
அமைச்சரவையில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் தினமான புதன்கிழமைகளில், அமைச்சர்கள் மிகவும் வேலைப்பழுவை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், 100 தொடக்கம் 600 பேர் வரையான மக்களை சந்திப்பதாக, ஒரு சில அமைச்சர்கள் அமைச்சரவையில் தெரிவித்தாக அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.
எனவே, பாராளுமன்ற தினம் அல்லாத தினமாக காணப்படுகின்ற திங்கட்கிழமையை பொதுமக்கள் தினமாக மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
60 வருடங்களாக மக்கள் பழகி வந்த குறித்த நடைமுறை மாறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இன்று வியாழக்கிழமை என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.
அதன் அடிப்படையில் புதன்கிழமைகளில் அமைச்சரவை கூட்டத்தை நடாத்துவதற்கும், திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் தினத்தை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், பொதுமக்கள் தினத்தில் வேறு கூட்டங்கள், நேர்முகப்பரீட்சைகள் உள்ளிட்ட எதனையும் நடாத்துதவற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விசேடமாக, பொதுமக்கள் தினத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் அலுவலகங்களில் கடமையில் இருக்க வேண்டும் என்பது தொடர்பான சுற்றறிக்கையொன்று, விரைவில் ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(றிஸ்வான் சேகு முகைதீன்) – தினகரன்