போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் நிகழ்ச்சித் திட்டங்களை அவமதிப்பு – ஜனாதிபதி
போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை அவமதிப்போரும் போதைப்பொருட் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களேயென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
எத்தகைய தோற்றத்தில் இருந்தபோதும் அவர்கள் போதைப்பொருள் கடத்தல் காரர்களின் பணத்திற்கு அடிமையானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் நேற்று (30) நடைபெற்ற “போதையிலிருந்து விடுதலைப்பெற்ற நாடு” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்துவதைப்போன்று பாடசாலை பிள்ளைகள் மற்றும் அரச அதிகாரிகளை இலக்காகக்கொண்ட விசேட நிகழ்ச்சித் திட்டங்களை எதிர்வரும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திற்கு சமமான யுத்தம் ஒன்றை போதைப்பொருள் சவாலை முறியடிப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்கும் தீர்மானத்தையும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.தேரவாத பௌத்த தத்துவத்திற்கு எதிராக இன்று பல்வேறு சக்திகள் செயற்படுகிறது.
பௌத்த தத்துவத்தை திரிபுபடுத்தி காட்டுவதற்கு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள், கலாசார பெறுமானங்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளைபோன்று போதைப்பொருள் கடத்தலும் நாட்டை அழிவுக்குள்ளாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சூழ்ச்சியே. இந்த விடயத்தில் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டு தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றி தாய் நாட்டை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.
“போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக இடம் பெறும் மாவட்ட மீளாய்வு நிகழ்ச்சித் திட்டத்தின் 13ஆவது நிகழ்ச்சித்திட்டம் மாத்தறை மாவட்டத்தை மையப்படுத்தி நடைபெற்றது.
மாத்தறை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பிற்காக விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 650 கிராமிய நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு போதைப்பொருள் பற்றி அறிவூட்டப்பட்டும் வருகின்றது.
மேலும் போதைப்பொருள் ஒழிப்பு செயலணியில் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ள கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் மூலம் மாத்தறை மாவட்டத்திலுள்ள 05 வலயங்களை சேர்ந்த சுமார் 51 பாடசாலைகளின் மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.இந்த நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இதற்கு பங்களிப்பு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வும் இம்மாநாட்டில் இடம்பெற்றன. (thinakaran)