புத்தாண்டின் புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு ஏற்ப மாணவர்களுக்காக பாடசாலைகளை தயார்படுத்தும் நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகிய தரப்பினர் பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரின் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்று தயார்படுத்தி வருகின்றனர். நாட்டின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைக் கொண்ட மேல் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களும் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஓர் சூழ்நிலையில் நீண்ட காலத்திற்குப் பிறகு பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதனால் நீண்ட கால இடைவெளியின் பின்னர் மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிப்பதனால் அவர்களை இன்முகத்தடன் வரவேற்று அவர்களது நிலைமைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பாடசாலை சூழலை, வகுப்பறைகளை தயார்படுத்தி கற்றல் கற்பித்தலுக்கு ஆயத்தம் செய்ய வேண்டிய பொறுப்பு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையே சாரும்.
பாடசாலைக்கு சமுகமளிக்கும் மாணவர்கள் உடனடியாக கற்றலில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுவர். சிரமங்களை எதிர்கொள்வர். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை அவதானித்து அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களது நிலைமைகளை கண்டறிந்து அதற்கு ஏற்ற விதத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலைமைகளை ஆசிரியர்கள் மாத்திரமன்றி பெற்றோரும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற விதத்தில் வீடுகளில் நடந்து கொள்ள வேண்டும்.
வழங்கப்படுகின்ற பயிற்சிகளை உரிய நேரத்தில் செய்து காட்டாமை, கற்பித்தலின் போது பாடத்தில் கவனம் செலுத்தாமை, ஏனைய மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருத்தல், கற்பித்துக் கொண்டிருக்கும் போது ஆசனத்தை விட்டும் எழுந்து வெளியே செல்ல முற்படல் மற்றும் அடிக்கடி கழிப்பறை செல்லல் போன்ற அறிகுறிகள் வகுப்பறைகளில் தென்பட ஆரம்பித்தால் ஆசிரியர்கள் இந்த மாணவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி, மாணவர்களை கற்றலுக்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
நீண்ட காலமாக வீடுகளில் தங்கியிருந்து வருகை தந்ததனால் மாணவர்களின் மனப்பாங்குகளிலும், உணர்வுகளிலும் மற்றும் மனவெழுச்சிகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இதனால் இவ்வாறான மாணவர்கள் அதிகம் கோபமடையக் கூடியவர்களாக காணப்படுவர். இவர்கள் ஏனைய மாணவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடியவர்களாகத் திகழ்வர். இந்த மாணவர்களை இனங்கண்டு அவர்களை ஆறுதல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பல்வேறு உளவியல் முறைகள், உத்திகளை வகுப்பறைகளிலும் வெளியிலும் கையாளலாம்.
மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்ததும் கொவிட்19 தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு சகல சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப பழக்கவழக்கங்களை மேற் கொள்வதற்கான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். பாடசாலைக்குள் நுழையும் போது முகக்கவசம் அணிந்து உள்ளே நுழைதல், உள்ளே நுழைந்ததும் கைகளை கழுவுதல், சமூகஇடைவெளியை பேணி நடத்தல், உணவு, தண்ணீர் மற்றும் உபகரணங்களை பரிமாறிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளல் போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தி மாணவர்களை இவற்றிற்கு இயைபாக்கம் அடையச் செய்வதில் பயிற்றுவிக்க வேண்டும்.
மாணவர்கள் பாடசாலைக்கு வருவதற்கு முன்பு பெற்றோரும், மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்ததன் பின்பு ஆசிரியர்களும் நாளாந்தம் சுகாதார பழக்கவழக்கங்களை ஞாபகப்படுத்த வேண்டும். பாடசாலைகளில் இவற்றை காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் பெற்றோர் மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வர வேண்டும். பாடசாலை முடிவடைந்ததும் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் செல்லவும் பெற்றோர் ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது சுகாதார வழிகாட்டல்களுக்கேற்ற போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக விடுமுறை காலங்களில் விடுபட்ட பாடங்களை கற்பிப்பதில் கூடுதல் அழுத்தங்கள் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முடியுமான வரை மாணவர்கள் மகிழ்ச்சியாக செயற்படுவதற்கு ஏற்ற விதத்தில் மகிழ்ச்சிகரமான கற்றலை முன்னெடுக்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பாகின்றது.
ஒவ்வொரு புதிய நாளின் ஆரம்பத்திலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக மாணவர்களை உற்சாகமாக கற்றலில் பங்கு கொள்ளச் செய்ய முடியும். எனவே பெற்றோரும் ஆசிரியர்களும் இவற்றை கருத்திற் கொண்டு புதிய பாடசாலை தவணைக்கு மாணவர்களை தயார்படுத்துவார்களேயானால் மாணவர்கள் எவ்வித சிரமங்களுமின்றி சுகாதார வழிகாட்டல்களுக்கேற்ப பாடசாலை கல்வியை மகிழ்ச்சியாக தொட ர்வார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தினகரன்