மந்த போஷாக்கை கொண்ட கிளிநொச்சி, முல்லைதீவு, திருகோணமலை, நுவரெலியா, பதுளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களின் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சமூக, சுகாதாரம் மற்றும் கல்வி சுட்டெண்ணுக்கு அமைவாக இலங்கை உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. இருப்பினும், இன்னும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் மந்த போஷாக்குடன் கூடிய சிறுவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாடசாலை மாணவர்களின் போஷாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்காக பாடசாலையில் உணவு திட்டம், பாடசாலை பால் வழங்கும் வேலைத்திட்டம், திரிபோஷா வேலைத்திட்டம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம் முதலான வேலைத்திட்டங்கள் வெவ்வேறான அமைச்சுக்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களின் போஷாக்கை அதிகரிப்பதற்காக அமெரிக்காவின் விவசாய திணைக்களத்தினால் Save the Children அமைப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வர்த்தக தொடர்புகளுடன் அடிப்படையில் சுய கட்டுப்பாடு எழுத்தறிவு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 26 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. 5 வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும் உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ், 8.8 டொலர் மாத்திரம் பெறுமதி கொண்ட உயர் தரத்திலான பொருட்கள் 4,220 மெற்றிக்தொன்னும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் போஷாக்கு சுகாதாரம், பராமரிப்பு கல்வி முதலான பிரிவுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் முன்வைத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைதீவு, திருகோணமலை, நுவரெலியா, பதுளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள 887 பாடசாலைகளில் கல்வி பயிலும் 108,940 எண்ணிக்கையான மாணவர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் தேசிய உணவுப் பொருட்களுக்கு மேலதிகமாக நிறை உணவை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இவர்களின் போஷாக்கு குறைப்பாட்டை பூர்த்தி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.